தொடர்ந்து சிங்கள அரசும், இந்திய அரசும், ஊடகங்களும் பிடிவாதமாக பிரபாகரனும், புலிகள் இயக்கமும் அழிந்து விட்டதாக சாதிக்க முயல்கின்றன. இடையிடையே வெகு சில ஊடகங்கள் அப்படியொன்றும் நடந்து விடாது என்ற நம்பிக்கையை பற்பல ஊகங்கள் மூலமும், உலாவரும் ஆதாரங்களின் மீதான சந்தேகங்கள் மூலமும் உயிர்ப்பிக்க முனைகின்றன. நிறைய அஞ்சலி கட்டுரைகள் - சில நிஜமான ரத்தக்கண்ணீரோடும், சில உள்ளுக்குள்ளே எழும் நிம்மதி பெருமூச்சை அடக்கிக் கொண்டும் எழுதப்பட்டு இணையமெங்கும் இறைக்கப் பட்ட வண்ணம் இருக்கின்றன.
போர் ஓய்ந்து விட்டதா என்று CNN கருத்துக் கணிப்பு நடத்துகிறது. பிரபாகரன் என்ற ஒற்றை மனிதனையோ, புலிகள் என்கிற ஒற்றை இயக்கத்தையோ அழித்துவிட்டால் அத்தோடு ஒரு சுதந்திர போராட்டம் ஓய்ந்து விடும் என்கிற எண்ணமே ரொம்ப சிறுபிள்ளைத் தனமானது. பல் வேறு இனத்தவர் கூடி வாழும் இடத்தில் ஒரு குழுவுக்கு ஆதிக்க வெறி ஏற்பட்டு விட்டால், அதற்கு இரண்டே தீர்வுகள்தான் சாத்தியம். ஒன்று மற்றவர்கள் அக்குழுவை பிரிந்து வாழ்வது, அல்லது இருக்கும் இரண்டு இனத்தில் ஏதேனும் ஒன்று மிச்சம் மீதியில்லாமல் அழிந்து போவது. எந்த மனித இனமும் காலகாலத்துக்கும் அடிமை வாழ்வை ஏற்றுக் கொண்டு வாழ்ந்து தீர்க்க முடியாது. எனவே தமிழினத்தில் கடைசி மனிதன் மிச்சமிருக்கும் வரை என்றேனும் ஒரு நாள் இன்னொரு போராட்டம் வந்தே தீரும். அது அகிம்சை வழியிலானதா, ஆயுத வழியிலானதா, ஆயுத வழியெனில் யார் வழி நடத்துவார்கள் என்பது போன்ற கேள்விகளுக்கெல்லாம் பதில் காலத்தின் கரங்களுக்குள் நிச்சயம் இருக்கும்.
ஆனால், அதற்கெல்லாம் முன்னால் இன்று நமக்கு பெரும் சவால்கள் பல காத்திருக்கின்றன.தமிழ்நாட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட அகதிகள் முகாம்களில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர் அகதிகளாக அடைப்பட்டுள்ளதாக சில புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அதே போல இந்தியாவுக்கு வெளியே வெவ்வேறு நாடுகளில் பல லட்சம் மக்கள் அகதிகளாக வாழ்கிறார்கள். வெளிநாட்டில் அகதிகளாக வாழும் தமிழர்களின் நிலை கொஞ்சமேனும் கண்ணியத்துடன் இருப்பதாக அம்மக்களின் எழுத்துக்களின் மூலம் அறியமுடிகிறது. அதே சமயம் தன் தொப்புள் கொடி உறவென நம்பிக்கையோடு தமிழகத்துக்குள் வந்தவர்கள் அடைபட்டுக் கிடக்கும் முகாம்களின் நிலமை என்னவாக இருக்கிறது?
காலையிலும், மாலையிலும் கையெழுத்திட்டு தன் இருப்பை உறுதி செய்து கொள்ளும் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்த குற்றவாளிகள் போல, அகதி முகாமில் இருப்பவர்கள் வேலை காரணமாகவோ, படிப்பின் காரணமாகவோ வெளியில் செல்பவர்கள் கூட மாலைக்குள் திரும்பி விட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். ஒரு நாள் இரவு கூட வெளியே தங்குவதற்கு அனுமதிக்கப் படுவதில்லை.
போதிய கழிப்பிட வசதியோ, மின்சார வசதியோ இல்லாமல் அம்மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருவது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? வெளியிலிருந்து முகாமிற்குள் எடுத்துச் செல்லப் படும் எல்லா உடமைகளும் கடுமையான சோதனைக்குப் பிறகே அனுமதிக்கப் படுகின்றன – அது காய்கறி பழம் வாங்கிய பையாக இருந்தாலும். புதிதாக வரும் அகதிகளிடம் சோப்பு, செண்ட், பாலிஸ்டர் துணி வகைகள், கடிகாரம் போன்றவற்றை அபகரிக்கவோ அல்லது விலை குறைத்து வாங்கிக் கொள்ளவோ நம் மக்கள் எப்போதும் தயாராகவே இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் வாழ்கை நிலை மேம்பட நாம் என்ன செய்து விட்டோம்?
இலங்கையிலிருந்து அகதியாக வந்த ஒரு வாலிபர் ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுத்து வரும் பிரபலமான ஒரு அரசியல் கட்சித் தலைவரின் நிறுவனமொன்றில் வேலை கேட்டு விண்ணப்பிக்க, புலியாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் அந்த வாலிபருக்கு வேலை மறுக்கப் பட்டது.
புலிகளை முற்றாக அழித்துவிட்டோம் என ராஜபக்ஷே அரசு சொல்லியிருக்கிறது. இதுதான் சமயமென ஒரு வேளை தமிழகத்திலிருக்கும் அகதிகள் திருப்பி அனுப்பப் படலாம். ஆனால் சர்வதேச சமூகமோ அகதியாக நாடிழந்தவன் தன் சொந்த நாட்டிற்கு திரும்பிப் போக விரும்புகிறானா இல்லையா என்பதை அறிந்தே அனுப்ப வேண்டும். அதை விடவும் அப்படித் திரும்பிப் போகும் அகதிகள் சுதந்திரமாய் உயிர் வாழக் கூடிய சூழ்நிலை அங்கே நிலவுகிறதா என்பதை ஆய்வு செய்த பின்னரே அனுப்ப வேண்டும் எனவும் சொல்கிறது.
சரி, இந்தக் கருத்து கனடா, ஜெர்மன் போன்ற மற்ற மற்ற நாடுகளுக்குச் சரி. அவர்கள் எல்லோருக்கும் இலங்கையில் நடக்கும் பேரழிவு பற்றித் தெரிந்திருக்கிறது. ஆனால் இந்தியாவின் நிலை என்ன? புத்தரின் கருணை வெள்ளம் இலங்கையின் இண்டு இடுக்குகளில் எல்லாம் வழிந்து ஓடுவதாகவும், ராஜபக்ஷே என்பவர் ஒரு மஞ்சளாடை அணியாத புத்த பிக்கு எனவும் நம்பும் அல்லது நம்புவதாகச் சொல்லிக் கொள்ளும் மதியூக மந்திரிகளும், வெளியுறவுத் துறை செயலாளர்களும், நடு நிலை நாளேடுகளின் அதிபர்களும் அல்லவா இங்கே வெளியுறவுக் கொள்கையை முடிவு செய்கிறவர்களாக இருக்கிறார்கள்? அவர்கள் நாளையே, அகதி முகாம்கள் என்ற பெயரில் இங்கே இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு மாறு பட்ட சிறை வடிவத்தில் அடைந்து கிடக்கும், கேட்க நாதியில்லாத மக்களை தேனாறும் பாலாறும் பாய்ந்தோடி வளம் கொழிக்கும் அவர்களின் அன்னை பூமிக்கு திரும்பிச் செல்லுங்கள் என்று நிர்பந்திக்க மாட்டார்கள் என்று என்ன நிச்சயம்?
அப்படி ஒரு நிலை வந்தால் அன்று மட்டும் என்ன செய்து கிழித்துவிடப் போகிறோம் நாம்? நம் தலைவர்கள்தான் என்ன செய்து விடப் போகிறார்கள்? அவர்களுக்கு அடுத்த தேர்தல் கூத்திற்கு இன்னமும் இரண்டு வருட அவகாசம் இருக்கிறது. அப்படியே நாளையே தேர்தல் என்ற நிலை வந்தாலும் கூட இரண்டு வேளை உணவுக்கு இடைப் பட்ட நேரத்து உண்ணா நிலை போதும், அனுதாபத்தை அள்ளவும், இப்பிரச்சனையில் தமக்கிருக்கும் அனுதாபத்தைக் காட்டவும். அதற்கும் மேல் சேர்த்து வைத்திருக்கும் செல்வத்திலிருந்து ஒரு சில துணுக்குகளை வாரியிறைத்தால் போதும், உத்திரவாதமாக நம் மக்கள் பொத்தாங்களை அழுத்தி வாங்கிய காசுக்குத் தம் விசுவாசத்தை நிரூபித்து விடுவார்கள்.
அவ்வளவு தூரமெல்லாம் போவானேன்? முதலில் இப்படி ஒரு இடப் பெயர்வு நடப்பதாகவே மக்களில் பெரும்பாலானோர்க்குத் தெரிய வாய்ப்பில்லை. இருக்கும் ஊடகங்கள் எல்லாம் கைகட்டி வாய் புதைத்து வேடிக்கை பார்த்திருக்கும், அல்லது அன்றைய ரியாலிட்டி ஷோவில் இருந்து வெளியேற்றப் பட்ட இமாலய சோகத்தை யாரோ ஒரு பாடகனோ நடன மாமணியோ தாங்க முடியாமல் தேம்பித் தேம்பி அழுவதை கர்ம சிரத்தையாக ஒளிபரப்பி சோகக் கடை விரித்திருப்பார்கள்.
சரி, இதையெல்லாம் தடுக்க என்னதான் செய்ய முடியும் நாம்? முதலில் அகதிகள் முகாம் என்று அழைக்கப் படும் சிறைகளில் அடை பட்டுக் கிடக்கும் மக்களின் நிலை இன்று என்னவாக இருக்கிறது? அதற்கு காரணமாகச் சொல்லப் படுவது என்ன? அவர்கள் விரும்பிய முறையில் வெளியில் சென்று வேலை பார்க்கவோ, படிக்கவோ முடிவதில்லை. தட்டுத் தடுமாறி படித்து முடிப்பவர்களுக்கும் கூட அரசு வேலை வாய்ப்புக்கள் கனவிலும் சாத்தியமில்லை. ஏகப் பட்ட கண்காணிப்புக்கு உள்ளாகியிருக்கும் இவர்களை வேலைக்கு எடுத்துக் கொள்ளும் துணிச்சல் தனியார் நிறுவனங்களுக்கு மட்டும் வந்துவிடவா போகிறது? வெளியிலிருக்கும் மக்கள் விரும்பினாலும் கூட அவர்களால் முகாமில் இருப்பவர்களுக்கு பொருளாதார உதவிகளோ, வேலை வாய்ப்புக்கான உதவிகளையோ தடையின்றி செய்ய முடிவதில்லை. இத்தனை கட்டுப் பாடுகளுக்கும் இன்று வரை சொல்லப் படும் ஒரே காரணம் இவர்களை சுதந்திரமாக விட்டால் புலிகளுக்கு உதவி விடுவார்கள் என்ற நைந்து புளித்துப் போன ஒற்றை பதில்தான்.
இன்று நம் முன்னால் இருக்கும் மிகப் பெரிய கடமை ஈழப் போராட்டத்தை இனி யார் தொடர்வார்கள் என்று கவலைப் படுவது இல்லை. ஏனெனில் அதில் நாம் உருப்படியாக எதுவும் செய்துவிட முடியப் போவதில்லை என்பது நிச்சயம். தந்திரமாய் இந்திய அரசும், இலங்கை அரசும் செய்யும் பிரச்சாரத்தை முறியடிக்க அவர்களின் ஆதாரங்களில் உள்ள ஓட்டைகளைக் கண்டுபிடித்து பட்டியலிடுவதை விட்டுவிட்டு, நாமும் அவர்களின் வழியிலேயே போய் நம்மிடம் உள்ள பிரச்சனைகளுக்கு ஏதேனும் தீர்வு காண முடியுமா என முயலுவதே ஆக்க பூர்வமான முயற்சியாக இருக்கும். சரி, பிரபாகரன் இறந்து விட்டார். புலிகளின் கடைசி அத்தியாயம் முடிந்து விட்டது. எல்லாவற்றையும் நாமும் ஒப்புக் கொள்வோம். இப்போது அந்த அகதி முகாமில் இருப்பவர்களின் மீதான கெடுபிடியை தளர்த்தலாம் இல்லையா? அவர்களையும் பயங்கரவாதிகளைப் போல அச்சத்தோடு பார்க்க வேண்டிய தேவை என்ன? பங்களாதேஷ் சுதந்திரமடைந்த உடன் அங்கிருந்து வந்த அகதிகளையெல்லாம் திருப்பியா அனுப்பி விட்டோம்? அவர்களுக்கு ரேஷன் கார்டு உட்பட எல்லாவற்றையும் கொடுத்து நம் சமூகத்துக்குள்ளேயே ஐக்கியப் படுத்துக் கொண்டுவிட வில்லையா? அதே நியாயம் இனி ஈழத் தமிழர்களுக்கும் பொருந்தும் தானே? இனிதான் யாரும் புலிகள் பூச்சாண்டி காட்ட முடியாதே? புலிகளைத்தான் ஒழித்து விட்டார்களாமே சிங்கள ராணுவத்தினர்? அப்புறமும் என்ன இவர்களைப் பற்றிய பயம்?
எனவே இனியேனும் முகாம்களில் அடைந்து கிடக்கும் அந்த அப்பாவிகளுக்கு கொஞ்சமேனும் சுதந்திரக் காற்றை அனுப்பி வைக்க முயற்சிப்போம். நன்கொடை என்ற நாகரீகப் பிச்சைக்கு பதில் அவர்களின் கல்விக்கும் வேலை வாய்ப்புக்குமான ஏற்பாடுகளை நம்மாலான அளவில் செய்து கொடுப்போம்.
- அகதிகளாக வந்து இங்கே வாடும் சொந்த சகோதரர்களுக்கு ஒரு விழுக்காடேனும் அரசு வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை தர அரசு முன் வர வேண்டும்.
- அகதிகள் முகாம் என்ற ஒற்றை கட்டுமானத்திற்குள்தான் வாழ வேண்டும் என்று நிர்பந்திக்காமல், நாட்டின் எப்பகுதியிலும் வாழ அனுமதிக்கப் பட வேண்டும்.
- பாஸ்போர்ட், விசா போன்ற தகுந்த ஆதாரஙக்ளில்லாமல் கள்ளத் தோணிகளில் வந்து சேர்ந்த இவர்களுக்கு, முதல் கட்ட விசாரணையின் பின் ரேஷன் கார்டு போன்ற முறையான ஆவணங்கள் வழங்கப் பட வேண்டும்.
- சொந்தத் தொழில் செய்ய நினைப்போருக்கு வங்கிகள் கடன் தர முன் வர வேண்டும்.
- அங்கே விவசாயம் மட்டுமே செய்து வந்தவர்களுக்கு இங்கேயும் விவசாயத்துக்கு நிலம் ஒதுக்கப் பட வேண்டும்.
இலங்கையில் தவிக்கும் தமிழர்கள் துயர் துடைக்க 500 கோடி ரூபாயை அள்ளித்தரப் போகிறதாம் இந்திய அரசாங்கம். அதுவும் யார் கையில்? எந்த அரசு தன் சொந்த நாட்டு மக்களின் மேல் கொத்து குண்டுகளை வீசியதோ அதே அரசின் கைகளில். சரி, போகட்டும். அதையெல்லாம் தடுக்கும் சக்தி நம் யாருக்கும் இல்லை.
இங்கே நம் நாட்டுக்குள்ளே தவிக்கும் இந்த அப்பாவி மக்களுக்காக அதில் பத்தில் ஒரு பகுதி தொகையை ஒதுக்கினாலே மேலே சொன்ன நலத் திட்டப் பணிகளை விடவும் கூடுதலாகவே எல்லாம் நடந்துவிடும். சொந்த தேசத்தை விட்டு வெளியேறி வரும் முன் அந்த மக்கள் வாழ்ந்த பொருளாதார நிலையை இங்கு நாம் ஏற்படுத்திக் கொடுக்க முயல வேண்டும். அப்போதுதான் என்றாவது அவர்கள் சொந்த தேசத்துக்குத் திரும்பும் போது, விட்டு வந்த வாழ்கையை தொடர்வதற்கு ஏதுவாக இருக்கும். இல்லையெனில் அங்கு போன பின்னும் பூஜ்யத்திலிருந்து வாழ்கையை கட்டமைக்க வேண்டிய அவலத்திற்கு இம்மக்கள் ஆளாக நேரிடும்.
அதே போல இன்னமும் இலங்கையிலேயே மாட்டிக் கொண்டிருக்கும் மக்களுக்கான மறுவாழ்வுப் பணிகளும் சரியான முறையில் நடக்க வேண்டும். எனவே இனியேனும், செஞ்சிலுவை சங்கமும், மற்ற சர்வதேச தொண்டு நிறுவனங்களும் நேரடியாக அம்மக்களுக்கு உதவ அனுமதிக்கப் பட வேண்டுமென்ற கோரிக்கையை உரக்கச் சொல்ல வேண்டும்.
மீண்டும் மீண்டும் பிரபாகரன் உயிரோடிருப்பதாக நிரூபிப்பதில் நாம் செலவழிக்கும் ஆற்றலை ஆக்க பூர்வமாக இது போன்ற விஷயங்களில் செலவழித்தால் அம்மக்களுக்கு ஏதேனும் நிவாரணம் கிடைக்கக் கூடும். எல்லோரும் போராட்டம் ஓய்ந்து விட்டது என்று சொல்லிவிடுவதால் ஓரு போதும் சுதந்திர உணர்வு இல்லாமல் போய் விடப் போவதில்லை. காலம் வரும் போது சுதந்திரப் போர் மீண்டும் வரட்டும். இப்போது பசியில் சாகிறவனுக்கு உணவும், கொஞ்சம் கவுரவமான வாழ்வும் தர முயற்சிப்போம்.
No comments:
Post a Comment