Sunday, May 24, 2009

நடந்தது என்ன?-ஜெகத் கஸ்பர்


வன்னியில் இறுதி யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை மிகுந்த பாதுகாப்புடன் அவரது தளபதிகள் வெளியேற்றிவிட்டதாகவும், அவருடன் முக்கியமான தலைவர்கள் சென்றுள்ளதாகவும் அருட்தந்தை ஜெகத் கஸ்பர்ராஜ் நக்கீரன் இதழில் எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளார்.

இறுதிநாளில் யுத்தத்தை நிறுத்த கனிமொழி எம்பி, சுப வீரபாண்டியன் ஆகியோருடன் தானும் முயன்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக நடேசன் மற்றும் புலித்தேவன் சமாதானம் பேசச் சென்றது இந்திய அரசில் முக்கியப் பங்கு வகிக்கும் ஒருவர் அளித்த உறுதிமொழியின்பேரில்தான் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜெகத் கஸ்பர்ராஜ் எழுதியுள்ள கட்டுரையின் ஒரு பகுதி:

ராஜபக்சேக்களுக்கு லாவணி பாடும் ஆனந்தசங்கரிகளே… இருக்கிறவரை ஏதேனும் நாற்காலியில் இருந்துவிட்டுப் போங்கள். தங்க முலாம் பூசிய கக்கூஸ் வாளிகளுக்கும் கருணை செய்து ஓய்வூதியம் தர வேலுப்பிள்ளை பிரபாகரன் விரைவில் வருவான். உங்களுக்காக வரவில்லையென்றாலும் முல்லைத்தீவு முற்றுகையின் கடைசி நாள் நடந்த மன்னிக்க முடியா துரோகத்திற்கு நீதி செய்யவேனும் அவன் வருவான்.

கடைசி நாளில் -அதாவது கடந்த சனிக்கிழமை நடந்தது இதுதான்.

வேலுப்பிள்ளை பிரபாகரனும் எதிர்காலத்தில் போராட்டத்தையும் இயக்கத்தையும் மீள் கட்டமைப்பு செய்வதற்கு முக்கியமானவர்களான சில தளபதியர்களும் பாதுகாப்பாக அகன்றபின் களத்தின் இறுக்கம் தணிகிறது.

இறுதி யுத்தம்… என்ன நடந்தது?

கை ஒடிந்து, கால் முறிந்து, உடலின் சில பகுதிகள் சிதைந்து ரத்தம் வழிந்தே பாதி செத்துப் போன சுமார் 12,000 அப்பாவி மக்களையும், அவ்வாறே காயமுற்ற சுமார் 3,000 போராளிகளையும் எப்படியேனும் அப்புறப்படுத்திக் காப்பாற்றும் முடிவினை விடுதலைப்புலிகள் எடுக்கிறார்கள். கடற்புலித் தளபதி சூசை மதுரையில் ஒருவரோடு தொடர்பு கொண்டு காயமுற்ற மக்களையேனும் பாதுகாப்பாய் வெளியேற்ற 48 மணி நேர சண்டை நிறுத்தம் வேண்டுகிறார்.

மதுரை தமிழரோ உணர்வாளர் சுப.வீ. என்ற சுப.வீரபாண்டியன் அவர்களை மன்றாட சுப.வீ. அவர்கள் கனிமொழி அவர்களின் கருணையை கேட்கிறார். கனிமொழி அவர்கள் காங்கிரஸ் கட்சியின் முக்கியமான ஒருவரோடு பேச ‘அதிகாரப்பூர்வமற்ற’, ஆனால் யதார்த்தமான முடிவொன்று தரப்பட்டது.

“விடுதலைப் புலிகளின் அனைத்துலக பொறுப்பாளர் செல்வராஜா பத்மநாபன் கொழும்பிலுள்ள இந்திய தூதுவருக்கு ஆயுதங்களை ஒப்படைக்க தயாராக உள்ளோம் என்ற முடிவினை எழுத்துப்பூர்வமாய் தொலைநகல் (பேக்ஸ்) வழி உடனே தெரிவிக்க வேண்டும். மற்றவையெல்லாம் இந்தியா பார்த்துக் கொள்ளும்”.

இரவு 10 மணி ஆயிற்று.

இந்தக் கட்டத்தில் நானும் இணைந்தேன். லண்டனிலுள்ள எனது நண்பர்கள் மூலம் செல்வராஜா பத்மநாபன் அவர்களுக்கு தகவல் சொல்லப்பட அவரும் மின்னல் வேகத்தில் இயங்கினார்.

“இந்தியாவிடமே நாங்கள் ஆயுதங்களை ஒப்படைக்கத் தயாராக இருக்கிறோம். அது சாத்தியமில்லையென்றால் ஐ.நா. ஏற்பாட்டில் ஒப்படைக்கிறோம்” என்ற முடிவை விடுதலைப் புலிகள் இரவு 11.50-க்குத் தெரிவித்தார்கள். கனிமொழி தயக்கத்துடன் காங்கிரஸ் பெரியவரை தொடர்பு கொள்ள அவரும் விழித்தே இருந்தார். “கால அவகாசமில்லை. இந்தியாவிடம் சரணடைவதற்கான சாத்தியப்பாடுகள் இப்போது இல்லை. இலங்கை ராணுவத்திடமே சரணடைவதுதான் இப்போதைய நெருக்கடி நிலையில் ஆகக் கூடியது” என்கிறார் அப்பெரியவர்.

மக்களை காக்க வேண்டி இலங்கை ராணுவத்திடமே ஆயுதங்களை ஒப்படைக்கும் முடிவினை சனி நள்ளிரவு புலிகள் எடுத்தார்கள். ஞாயிறு காலை கொழும்பு இந்திய தூதரகத்தின் உதவியுடன் இலங்கைத் தமிழர் பாராளுமன்ற உறுப்பினர் கஜன் பொன்னம்பலம், ராஜபக்சேவோடு பேச்சுவார்த்தைகள் நடத்த முடிவொன்று ஏற்படுகிறது.

“முல்லைத்தீவு களத்தில் நிற்கும் புலிகளின் தளபதிகள் வெள்ளைக்கொடி பிடித்துக் கொண்டு இலங்கை தளபதிகளிடம் வரட்டும். ஆயுதங் ஒப்படைப்பது, காயமுற்றோரை அப்புறப்படுத்துவது தொடர்பான நடைமுறை ஒழுங்குகளை அவர்களே கலந்து பேசி முடிவு செய்யட்டும்’ என்பதாக அந்த ஏற்பாடு.

இம்முடிவினை ராஜபக்சே அலுவலகம் ராணுவத் தலைமைக்கும், முல்லைத் தீவு கட்டளைத் தளபதிகளுக்கும் அறிவிக்கிறது. இந்த ஏற்பாடுகள் முடியவே ஞாயிறு இரவாகி விடுகிறது.

ராஜபக்சேவுடன் நடந்த விவாதங்களையும் முடிவுகளையும் கஜன் என்ற கஜேந்திரன் பொன்னம்பலம், செல்வராஜா பத்மநாபனுக்குத் தெரிவிக்க முல்லைத்தீவு களத்தில் நின்ற விடுதலைப் புலிகளின் அரசியற் பிரிவுப் பொறுப்பாளர் நடேசனுடன் இவற்றை திங்கள் அதிகாலை 2.30 மணிக்கு விவாதிக்கிறார் பத்மநாபன்.

வெள்ளைக் கொடிகளுடன் வந்தவர்களை சுட்டுத்தள்ளிய இன வெறியர்கள்…

யுத்தம் 500 மீட்டர் அருகில் வந்த போதும் கூட உலகோடு உரையாடும் செயற்கைக்கோள் வசதிகளை விடுதலைப்புலிகள் கொண்டிருந்தார்கள் என்பது ஒரு ராணுவ அரசியல் இயக்கமாக எத்துணை ஆழமாக வளர்ந்திருந்தார்கள் என்பதற்குச் சான்றாகத் தெரிந்தது.

விடிந்ததும் நடேசன், சிறப்புத் தளபதி ரமேஷ் -இவர் முன்பு கருணாவின் துணை தளபதியாக இருந்தவர், புலிகளின் சமாதானச் செயலகப் பொறுப்பாளர் புலித்தேவன் மூவரும் வெள்ளைக் கொடி ஏந்தி சிங்களத் தளபதியர்களை சந்திக்கச் செல்வதாய் ஏற்பாடு.

வெடிபொருள் புகை கவிந்த முல்லைத் தீவு பரப்பு விடிந்தது. வெள்ளைக் கொடி ஏந்தி மூவரும் நடந்தார்கள். சிங்களத் தளபதியர்களின் கூடாரம் அருகே வந்தார்கள். ஏன், என்னவென்ற பேச்சின்றி சுட்டுக் கொல்லப்பட்டார்கள். பின்னர்தான் தெரிய வந்தது அவர்களைச் சுட்டுக் கொல்லும் உத்தரவை ராஜபக்சேவின் சகோதரனும் ராணுவ அமைச்சருமான கோத்தபய்யா ராஜபக்சே பிறப்பித்திருந்த சதி.

சர்வதேச போர்க் குற்றம்…

வெள்ளைக் கொடியேந்தி சரணடையவோ, பேச்சுவார்த்தை நடத்தவோ வருகிறவர்களுக்குத் தீங்கிழைப்பது யுத்தக் குற்றம். அனைத்துலக சட்டதிட்டங்கள் இதனை கடுமையாக வலியுறுத்துகின்றன. ஆனால் சிங்கள இனவெறி பிடித்தாடும் கோத்தபய்யாவை பொறுத்தவரை தமிழருக்காகப் பேச எவருமே உயிரோடு இருக்கக்கூடாது.

நடேசனும், புலித்தேவனும் சரணடைந்து கைது செய்யப்பட்டாலும் அவர்கள் யுத்தக் கைதிகளாகவே நடத்தப்பட வேண்டும். நாளை அனைத்துலக ஏற்பாட்டில் அரசியல் தீர்வுக்கான பேச்சுவார்த்தைகள் தொடங்கும் போது புலிகள் தரப்பிலும் பிரதிநிதிகள் இருக்க வேண்டுமென உலக நாடுகள் நிச்சயம் வலியுறுத்தும். அத்தகு சூழலில் தகுதியோடு தமிழரை பிரதிநிதித்துவப்படுத்த எவருமே இருக்கக்கூடாதென்பதுதான் கோத்தபய்யாவின் கணக்கு. முக்கிய செய்தி என்னவென்றால் இந்தியா சொல்வதையோ, அண்ணன் ராஜபக்சே சொல்வதையோ கேட்பதற்கு கோத்தபய்யா தயாராக இல்லை என்பதுதான்.

புல்டோஸர்கள் ஏற்றி மக்களைக் கொன்ற சிங்களர்கள் ராணுவம்…

கொடுமை அத்தோடு முடியவில்லை காயமுற்று பாதி உயிரோடு முனகிக் கிடந்த பத்தாயிரத்திற்கும் மேலான அப்பாவி மக்களை புல்டோசர்கள், செயின் புளக்-கள் ஏற்றிக் கொன்றுவிட்டு ஆதாரங் கள் ஏதுமின்றி அதிநவீன ரசாயனக் கலவைகள் ஊற்றி எரித்திருக்கிறார்கள். அவ்வாறே காய முற்றிருந்த சுமார் 3,000 போராளிகளையும் கருணை இரக்கமின்றி சுட்டுக் கொன்று வெறி தீர்த்திருக்கிறார்கள். வேறெதற்கும் இல்லையெனினும் கோத்தபய்யாவிற்கு நீதி சொல்லவேனும் வேலுப்பிள்ளை பிரபாகரன் வருவான், நிச்சயமாய் வருவான்.

மரணத்தில் நிழலில் வளர்ந்த அதிசயப் பிறவி பிரபாகரன்

மரணத்தின் நிழலில் வளர்ந்த அதீதப் பிறவி பிரபாகரன். மாத்தையா அவரது வாகனத்திற்கு அடியிலேயே வெடிகுண்டு பொருத்தினார். ஆனால் வெடிக்கவில்லை. ஏன் வெடிக்கவில்லை என்பதற்கு மனித அறிவு சார்ந்த விளக்கம் எதுவுமில்லை. சாவகச்சேரி நகர் வளைவு திறக்கும் நிகழ்வின் போது அவரோடு மூத்த தளபதிகள் யாவரதும் கதை முடிக்க மாத்தையா ஏற்பாடு செய்திருந்தார்.

விழாவுக்குப் புறப்படும் போது மோசமான வயிற்று நோவு வர விழாவிற்கு அவர் வரவில்லை. வந்திருந்தால் அன்றே அவர் வரலாறு முடிந்திருக்கும். திருநெல்வேலி தாக்குதலின் போது அவரது துப்பாக்கியில் ரவை தீர்கிறது. குனிந்து ரவை நிரப்புகிறார். புறத்தே மின்னல் தெரிகிறது. சக தோழர்களின் பறக்கிற ரவைகள் என நினைக்கிறார். காலையில் பார்த்தால், தான் குனிந்தபோதுதான் நின்ற இடத்திலேயே எதிரியின் ரவைகள் பாய்ந்து வந்திருக்கின்றன. அக்கணம் குனிந்திராவிட்டால் அன்றே அவர் முடிந்திருப்பார்.

“கடவுள் காத்து வருகிறார் எனக் கருதலாமா?” என 2002-ல் அவரிடம் கேட்டேன்.

“இன்னும் நான் செய்ய வேண்டிய கடமைகள் இருக்கிறதென இயற்கை நினைக்கிறது போலும்…” என்றார்.

தமிழர்களே, நண்பர்களே, முல்லைத்தீவில் கதை முடியவில்லை. புதிய கதை தொடங்குகிறது. உலகத் தமிழினம் இனி நடக்கப் போவது புதிய தடங்களில்.


இனி என்ன ஆவான் இலங்கைத் தமிழன்?

‘30 ஆண்டுக் கால யுத்தம் முடிவுக்கு வந்துவிட்டது!’ - ஜோர்டான் போன இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்ஷே பறந்து வந்து கொழும்பு மண்ணைக் குனிந்து முத்தமிட்டார்.
சிங்கள ஆட்சியின் கீழ் கிடந்த மூன்றில் ஒரு பங்கு நிலத்தைச் சிறுகச் சிறுகப் பறித்து ‘தமிழீழம்’ என்று பெயர் சூட்டி ஐ.நா. அங்கீகாரம் தவிர அத்தனை உள்கட்டமைப்புகளையும் நிர்மாணித்து வைத்திருந்த விடுதலைப் புலிகள் இயக்கம் முற்றாக அழிக்கப்பட்டதாகச் சிங்கள அரசு சொல்ல ஆரம்பித்திருக்கிறது.”இனி விடுதலைப் புலிகள் என்பதே கிடையாது. எல்லா மக்களையும் புலி களிடம் இருந்து மீட்டுவிட்டோம்” என்று மகிந்தாவின் சகோதரரும் பாதுகாப்புச் செயலாளருமான கோத்தபய ராஜபக்ஷே சொல்லி இருக்கிறார். சிங்கள ராணுவத் தின் அதிகபட்ச சாதனைக்குக் கடந்த ஐந்து மாதங்களில் மட்டும் சுமார் 35 ஆயிரம் தமிழர்கள் பலியாகி இருக்கிறார் கள். மகிந்தா பதவிக்கு வந்து யுத்தத்தைத் தொடங்கிய பிறகு சுமார் 90 ஆயிரம் தமிழர்கள் குண்டு வீசிக் கொல்லப்பட்டுள்ளார்கள். 22 ஆயிரம் சதுர கி.மீ. பரப்பு பல்லாயிரம் தமிழர்களைப் புதைகுழிக்குள் அனுப்பிக் கைப்பற்றப்பட்டுள்ளது. அதாவது பிணங்கள் புதைக்கப்பட்ட மைதானம் மகிந்தா வசமாகியிருக்கிறது.

இருக்கலாம் கொன்றது போக மீதம் உள்ள தமிழர்களின் கதி என்ன? இதுதான் இன்று பூதாகாரமாக இருக்கும் கேள்வி!

ராணுவ சாகசத்தைத் தன்னுடைய வெற்றிக் களிப்பாகக் கொழும்பு கொண்டாடி வரும் வேளையில் இலங்கையில் இருந்து இரண்டு குரல்கள் கேட்கின்றன. ”அரசுக்கும் புலிகளுக்கும் இடையிலான யுத்தத்தால் பாதிக்கப்பட்டது நிராயுதபாணிகளான மக்கள்தான். புலிகள் மீதான வெற்றி தேசியப் பிரச்னைக்குத் தீர்வாகாது. தமிழர்களின் விருப்பத்துக்கு முக்கியத்துவம் தரக்கூடிய அதிகாரப் பகிர்வுத் திட்டத்தை முன்வைக்க வேண்டும்” என்று சிவத்தம்பி உள்ளிட்ட தமிழ் அறிவுஜீவிகள் சொல்லியிருக்கிறார்கள்.

கொழும்பு தலைமை நீதிபதியான சரத் என். சில்வா ”வன்னியில் இருந்த மக்களை முதலில் சொந்த இடத்தில் குடியமர்த்த வேண்டும். சோறு போட்டு முகாமில் தங்கவைப்பது தீர்வாகாது. வடக்கு மாகாணத்தில் அகதி முகாம்கள் அதிகரித்து வருவது தீர்வாகாது. பத்து ஏக்கர் நிலப்பரப்புக்குள் 2 லட்சம் மக்களை எத்தனை காலத்துக்கு வைக்கப்போகிறீர்கள்? அவர்களுக்கு சட்டரீதியான தீர்வைச் சொல்லுங்கள். இல்லையென்றால் சர்வ தேச நாடுகள் தலையிட நேரிடும்” என்று சொல்லிஇருக்கிறார்.

போரை முடித்துவிட்டதாக அறிவித்திருக்கிற அரசாங்கம் அந்த அப்பாவித் தமிழ் மக்களுக்கு என்ன செய்யப் போகிறது என்பதை உலகம் உற்றுக் கவனிக்க ஆரம்பித்திருக்கிறது.

கொழும்பில் ஆறு லட்சம் தமிழர்கள் இருக்கிறார்கள். யாழ்ப்பாணத்திலும் அதே எண்ணிக்கையிலான மக்கள் இருப்பார்கள். கிழக்கு மாகாணத்தில் நான்கு லட்சம் பேரும் போர் முனையின் கொடுமையைக் கடந்த ஓராண்டாக அனுபவித்த வடக்கு மாகாணத்தில் இரண்டரை லட்சம் பேரும் இருக்கிறார்கள். சிங்களர்களின் பண்டிகை இலங்கை சுதந்திர தினம் தேர்தல் வெற்றிகளின்போது கொழும்புத் தமிழர்களின் நிம்மதி மொத்தமாகப் பறிபோய்விடும்.

வெள்ளை வேன்களில் கடத்தப்பட்டும் காவல் துறையால் அச்சுறுத்தப்பட்டும் வாழும் மக்கள் அவர்கள். தமிழன் என்பதற்கான அடையாளமான பொட்டு வைக்காமல் வாழப் பழகிவிட்டார்கள் அங்கு. யாழ்ப்பாணம் கடந்த 14 ஆண்டுகளாக எமர்ஜென்சி அறிவிக்கப்பட்ட பகுதி யாகத்தான் இருக்கிறது. அங்கு உறவினர்கள் யாரும் வந்து பார்க்க முடியாது. இவர்களும் வெளியூர் போக முடியாது. எங்கு வேலைக்குப் போனாலும் மாலை ஆறு மணிக்கு முன்னதாக வீட்டுக்குள் போய் அடங்கி விட வேண்டும் என்ற அடக்கு முறை தொடர்கிறது.

கிழக்கு மாகாணத்தில் தமிழர்கள் வாழும் இடங்களில் சிங்களவர்கள் வலுக்கட்டாயமாகக் குடியேற்றப்பட்டுள்ளார்கள். இடஒதுக்கீட்டின்படி சுகாதாரப் பணியாளர் வேலைக்கு 100 பேர் எடுத்தால் ஐந்து தமிழர்களுக்குத்தான் அங்கு வேலை கிடைக்கும். அந்த அளவுக்கு சிங்களக் குடியேற்றம் அதிகமாகிவிட்டது. புலிகளிடம் இருந்து கைப்பற்றியதும் ‘கிழக்கின் உதயம்’ என்று ஒரு திட்டத்தை மகிந்தா அறிவித்தார். பள்ளிக் கூடம் தொழிற்சாலை மருத்துவமனை ஆகியவை கட்டித் தரப்படும் என்றார். எதுவும் நடக்கவில்லை. அங்கு நடத்தப்பட்ட தேர்தலில் பிள்ளையான் முதலமைச்சர் ஆனார். ‘என் மாகாணத்தின் வளர்ச்சிக்குச் சொன்னபடி பணத்தை ஒதுக்கவில்லை’ என்று அவர் புகார் சொன்னார்.

உடனே சிங்கள அதிகாரிகளால் மிரட்டப்பட்டு இப்போது அமைதியாக இருக்கிறார். வடக்கு மாகாணத்தைக் கைப்பற்றியதும் ‘வடக்கில் வசந்தம்’ என்ற திட்டம் கொண்டுவரப்படும் என்று மகிந்தா அறிவித்துள்ளார். கிளிநொச்சியைப் பிடித்ததும் தமிழர்களுக்கான தீர்வு அறிவிக்கப்படும் என்று சொன்னார். ஆனால் ஐந்து மாதங்கள் ஆகியும் அப்படி எதுவும் அறிவிக்கப்படவில்லை.

‘தமிழர்கள் கொல்லப்படுகிறார்களே?’ என்று டெல்லி பத்திரிகையாளர்கள் மாறி மாறிக் கேட்டபோது கோபமான மகிந்தா ராஜபக்ஷே ”என் நாட்டு மக்களைப் பற்றி என்னைவிட உங்களுக்கு அதிகமான அக்கறை இருக்குமா?” என்று கேட்டார். அந்த அக்கறையை ராஜபக்ஷே காட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது. முதலில் அவர் கவனிக்க வேண்டியது வன்னி பகுதியில் உள்ள முகாம்களை.

போரின் பெருவாய் தின்று தீர்த்த மக்கள் போக இன்றும் லட்சக்கணக்கான தமிழ் மக்களை வதை முகாம்களில் அடைத்துவைத்திருக்கிறது சிங்கள அரசு. மாற்றுடுப்புகள் சிலவற்றுடன் தலைச் சுமையாக ஒரு பையைச் சுமந்தபடி உயிர்ப் பிச்சை கேட்டு வரும் மக்களை வவுனியா செட்டிக்குளம் மெனிக்பாம் பகுதி யின் அடர்காட்டுக்குள் அமைந்திருக்கும் இடைத்தங்கல் முகாமுக்குக் கொண்டுசெல்கிறார்கள். சுமார் 100 ஏக்கர் பரப்பளவிலான இந்த முகாமில் அரசின் கணக்குப்படி 1 லட்சத்து 33 ஆயிரம் குடும்பங்கள் இருக்கின்றன. இதுவரை 2 லட்சத்துக்கும் மேலானவர்கள் வந்திருப்பதாகச் சொல்கிறது. ஆனால் அந்த முகாம்களில் குடியிருப்பு என்று எதுவும் இல்லை. செஞ்சிலுவை சங்கம் வழங்கிய தற்காலிகக் கூடாரங்கள் மட்டுமே எங்கும் நிறைந்திருக் கின்றன. சின்னஞ்சிறிய கூடாரம் ஒவ்வொன்றிலும் மூன்று குடும்பங்கள் நெருக்கியடித்து வசிக்கின்றன.

முகாம் அமைக்கப்பட்டு மாதக் கணக்காகிவிட்ட நிலையில் இதுவரை லாரிகள் மூலமாகவே குடிதண்ணீர் விநியோகிக்கப்பட்டு வந்தது. அது குடிக்க மட்டுமே! குளிக்கவும் அன்றா டத் தேவைகளுக்கும் தண்ணீர் கிடை யாது. அவர்கள் அனைவரும் குளித்து வாரக்கணக்கில் மாதக்கணக்கில் ஆகின்றன. இப்போதுதான் முகாமில் கிணறு தோண்டும் பணி நடந்து வருகிறது. நாள் ஒன்றுக்கு ஒரு தடவை லாரிகள் மூலம் ஏதோ உணவு விநியோகிக்கிறார்கள். பசியால் பட்டினியால் வாடித் துடிக்கும் அம்மக்கள் அந்த உணவை வாங்க லாரிகளின் முன்னால் கையேந்தி முண்டியடிக்கின்றனர்.

கூட்டம் அதிகமாகும் நாட்களில் நாய்களுக்கு பிஸ்கட் வீசுவது போல மக்களை நோக்கி உணவுப் பொட்டலங்கள் தூக்கி வீசப்படுகின்றன. மக்கள் அதை ஓடி ஓடிப் பொறுக்கிக்கொள்ள வேண்டும். அந்த உணவையும் பெற வாய்ப்பற்ற வயது முதிர்ந்த பெரியவர்கள் மரணத்தைச் சந்திக்கின்றனர். மே 1 முதல் மே 11 வரைக்கும் மட்டும் பூந்தோட்டம் முகாமில் 61 முதியவர்கள் பட்டினியால் செத்துப் போயிருக்கிறார்கள்.
முகாமுக்கு வந்து சேர்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில் இப்போது வவுனியா முகாமைச் சுற்றி இரும்பு முள்வேலி அமைக்கப்பட்டு அதில் மின்சாரம் பாய்ச்சப்பட்டுஇருப்பதாகச் சொல்லப்படுகிறது. தப்பிக்க நினைத்தால் மரணமே பரிசு. ”இப்போது எங்களுக்கு எந்தப் பாதுகாப்பும் இல்லை. அடித்தாலும்,சுட்டாலும், சிதைத்தாலும், கற்பழித்தாலும், என்ன சித்ரவதை செய்தாலும் எங்களால் வாய் திறந்து பேச முடியாது.

துப்பாக்கிகளின் கண்காணிப்பில் சோறு உண்ணவும் உடுப்பு மாற்றவும் நிர்பந்திக்கப்படுகிறோம். சின்ன பாதுகாப்புக்கூட இல்லாமல் ஒரு திறந்தவெளி சித்ரவதைக் கூடத்தில் அடைக்கப்பட்டு இருக்கிறோம். இலங்கை அரசாங்கம் எங்களைப் போர்க் கைதிகளாகவே பாவிக்கிறது. எங்களைச் சிரிக்கச் சொல்லி புகைப்படம் எடுத்து, நாங்கள் மகிழ்ச்சியாக இருப்பதாகப் பிரசாரம் செய்கிறது. அடுத்த நான்கைந்து ஆண்டுகளுக்கு எங்களை நிச்சயம் இந்த முகாமைவிட்டு அனுப்ப மாட்டார்கள். வெளியில் வேலைக்குப் போகக்கூட அனுமதிக்க மாட்டார்கள். அரசாங்கம் கொடுக்கும் சோற்றைத் தின்றுகொண்டு அவர்கள் கொடுக்கும் தண்ணீரைக் குடித்துக்கொண்டு வெறும் பிணங்களாக அடிமைகளாக வாழ்வதைத் தவிர எங்களுக்கு வேறு வழி இல்லை.

இனி வரும் நாட்கள் எங்களுக்கு இன்னும் மிக மோசமானதாக இருக்கும். கேட்க நாதியற்ற எங்களை இலங்கை அரசாங்கம் என்னவும் செய்யும். கடும் சித்ரவதைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அதையும் தாண்டி எங்களின் பூர்வீகப் பிரதேசங்களில் மீளக் குடியமர்த்தினாலும் அந்த வாழ்க்கை நிம்மதியாக இருக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இல்லை. எங்களின் குறைந்தபட்சப் பாதுகாப்பு அரணாக இருந்த புலிகளும் இல்லாத நிலையில் இனி நாங்கள் யாரை நம்பி வாழ முடியும்? உலகத்து நாடுகளே… தயவுசெய்து எங்களை இலங்கையில் இருந்து மீட்டுச் செல்லுங்கள். இந்த தேசத்தை சிங்களனே வைத்துக்கொள்ளட்டும். அவர்களே ஆளட்டும். எங்களை விடுவியுங்கள். வேறு ஏதோ ஒரு நாடு… ஏதோ ஒரு வேலை… இலங்கை மட்டும் வேண்டாம். அரசியல் தஞ்சம் கேட்கிறோம் உயிர் தஞ்சம் கேட்கிறோம். தயவுசெய்து செவிமடுங்கள்… எங்களை மீட்டுச் செல்லுங்கள்” - வவுனியா முகாமில் அடைக்கப்பட்டு இருக்கும் ஒரு பெண்இ அங்கு பணிபுரியும் சேவை நிறுவன ஊழியரின் உதவியுடன் நம்மிடம் பேசிய வார்த்தைகள் இவை.

இன்று பிச்சைக்காரர்களைவிடக் கேவலமான நிலையில் மேலாடை இல்லாமல் உடம்பு வற்றி கையேந்தி நிற்கவைக்கப்பட்டு இருக்கும் ஈழத் தமிழர்கள் அத்தனை பேரும் நல்ல வாழ்க்கை வாழ்ந்தவர்கள். ஒட்டு மொத்த யாழ்ப்பாணத்திலும் இப்போது எண்ணிப் பார்த்தாலும்கூட 50-க்கு மேல் பிச்சைக்காரர்கள் இருக்க மாட்டார்கள் என்பதே யதார்த்தம். தமிழகம் போல ஈழத் தமிழர்களிடம் இத்தனைப் பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் கிடையாது. 90 சதவிகிதம் பேர் மத்திய தரக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். வறுமையையும் பட்டினியையும் கண்டறியாதவர்கள். இந்தக் கொடிய போர் அவர்களைப் பிச்சைக்காரர்கள் போலக் கையேந்த வைத்திருக்கிறது.

உச்சகட்ட சித்ரவதைக் கூடமாக இருக்கும் இந்த கதிர்காமர் இடைத்தங்கல் முகாமைத்தான் ‘நலன்புரி மையங்கள்’ என்றும் ‘உலகின் முன்மாதிரி நிவாரணக் கிராமம்’ என்றும் வர்ணிக்கிறது இலங்கை அரசு. ‘உலகின் மிகப் பெரிய பணயக் கைதிகள் மீட்பு நட வடிக்கை’ என இதைப் பிரசாரம் செய்கிறது. இம் மக்களை அவர்களது வீடுகளுக்கு அழைத்துச் செல்லுங்கள் என்று சொன்ன ஒரே காரணத்துக்காக   ரவிசங்கர் மீது கோபப்பட்டார் கோத்தபய ராஜபக்ஷே. கொழும்பிலும் இதே போன்ற நிலைமைதான். கொழும்பு பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவி நந்தினி (பெயர் மாற்றப்பட்டுள்ளது), ”எங்கள் பல்கலைக்கழக வளாகம் எங்கும் தமிழர்கள் பிணமாகக் கிடக்கும் காட்சிகள் புகைப்படங்களாக மாட்டி வைக்கப்பட்டுள்ளன. ‘இதே நிலைமைதான் நாளைக்கு உங்களுக்கும்’ என்று அந்தப் புகைப்படங்களைக் காட்டி சிங்கள மாணவர்கள் எங்களை எச்சரிக்கின்றனர். நடந்து செல்லும்போது மாடிக் கட்டடத்தில் இருந்து எச்சில் துப்புகின்றனர். எங்களால் எந்தச் சிறு வார்த்தையும் பேச முடியவில்லை. சிங்களம் கற்றுக்கொண்டு சிங்களனாக மாறுவது ஒன்றுதான் இங்கு உயிர் தரித்திருப்பதற்கான ஒரே வழி!” என்று தொலைபேசியில் கதறுகிறார்.

”கிளிநொச்சி மாவட்டத்தில் மட்டும் அடித்து நொறுக்கப்பட்டவை 56 ஆயிரம் வீடுகள். இப்படி தமிழர் வாழும் 10 மாவட்டங்களிலும் புள்ளிவிவரங்கள் எடுக்கப்பட்டு புனரமைப்பு வேலைகளை ஆரம்பிப்பதில் தொடங்கி உயிரோடு இருக்கும் அப்பாவி மக்களைக் கொண்டுபோய் அந்த வீடுகளில் குடியமர்த்தி நிம்மதியான தேசத்தில்தான் வாழ்கிறோம் என்ற நம்பிக்கையை விதைப்பதில் முடிய வேண்டும். கிழக்கு மாகாணத்தில் அடிப்படை வேலைகள் தொடங்கப்பட வேண்டும். யாழ்ப்பாணத்து எமர்ஜென்சி விலக்கப்பட வேண்டும். கொழும்புத் தமிழர்கள் தங்கள் தொழிலைத் தொடர உத்தரவாதம் வழங்கப்பட வேண்டும்” என்ற கோரிக்கையை அங்குள்ள தமிழர் அமைப்புகள் சொல்ல ஆரம்பித்துள்ளன.

தமிழ் எம்.பி. சேனாதிராஜா சொல்கிறார்… ”ஒரு கொள்கைக்காக அர்ப்பணித்து நின்ற தமிழ் மக்கள் ஆவியாக அலைகிறார்கள். அவர்தம் உறவுகள் சிறையில் வீழ்ந்து கிடக்கிறார்கள். கையில் காசுமின்றி ,நோய்க்கு மருந்துமின்றி, குழந்தைக்குப் பாலுமின்றி, உடுக்க மாற்றுத் துணியுமின்றி பட்டினியில் கிடக்கின்றன சொந்தங்கள். எமது உழைப்பில், எமது உணவில், எமது உப்பில், ஒரு பிடியையேனும் அல்லல்படும் தமிழனுக்குக் கண்ணீருடன் கொடுத்து உயிர் கொடுப்போம். கடல் கடந்து வாழ்பவர்கள் எங்களுக்காகப் பிரார்த்தனை செய்யுங்கள்!”


நாம் யாருக்கும் அஞ்சப் போவதில்லை

ஈழத் தமிழர்களின் இனப் படுகொலையில் புதுடில்லியின் ‘கை’யும் நனைந்துள்ளது என்றும் அத்துடன் தமிழ்நாட்டு மக்கள் கையறு நிலைக்கு ஆளாக்கப்பட்டனர் என்றும் உண்மை நிலவரங்களை அலசுகின்றார் தமிழ்நாட்டில் இருந்து அ.பொன்னிலா.

ஈழத் தமிழர்களே!
விடுதலைப் புலிகளே!
புலம்பெயர் மக்களே!

எங்களை மன்னித்து விடுங்கள்.

பெரும் தொகையான ஈழத் தமிழ் மக்களின் இனப் படுகொலையில் எங்களின் தாய் நாடு கை நனைத்திருக்கிறது.

இந்த உலகத்தின் இன்னொரு இனக் கொலை வரலாற்றில் நாங்கள் இன்று மௌன சாட்சிகளாக வாழும்படியாகி விட்டது.

அந்த ஞாயிற்றுக்கிழமை இரவு தொடங்கி நீங்கள் எங்களிடம் பல்வேறு உதவிகளைக் கேட்டீர்கள்.

மக்களை வெளியேற்றச் சொல்லிக் கேட்டீர்கள்.

மூன்றாம் தரப்பு ஒன்றிடம் ஆயுதங்களை ஒப்படைக்கவும் பிரச்சினையை பேசித் தீர்க்கவும் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தீர்கள்.

கடைசியில் இந்தியாவில் இருந்து உணவுக் கப்பல் ஏதாவது வருகிறதா? என்று கூடக் கேட்டீர்கள்.

ஆனால், என்ன செய்வது ஈவிரமில்லாத ஒரு துரோக நிழலுக்குள் நாங்கள் சபிக்கப்பட்ட ஒரு வாழ்வைச் சுமந்தபடி வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

வரலாற்றின் கொடூரமான பக்கங்களில் இன்னொரு முறை எழுதும்படியான இரத்தக்கறை இந்தச் சமூகத்தின் மீது படிந்து விட்டது.

இந்தியா என்னும் தென்னாசிய வல்லரசும் ஒரு இனவாத அரசும் சேர்ந்து உங்களைக் கொன்றொழித்தபோது தமிழகம் அதனை வேடிக்கை பார்க்கவில்லை.

எங்கள் மக்கள் வீதிக்கு வந்தார்கள். வழக்கறிஞர்கள் போராடினார்கள்.

நீங்கள் கொத்துக் குண்டுகளால் எரிவது கண்டு தங்களைத் தாங்களே தீயிட்டுக் கொண்டார்கள் 15 இளைஞர்கள்.

அவர்களின் தியாகங்கள் மிக மிக மலினமாக கொச்சைப்படுத்தப்பட்டது.

தடித்தனமாக நாங்கள் ஒடுக்கப்பட்டோம் இறையான்மையின் பேரால்.

ஆமாம், இந்திய இறையான்மையின் பேரால் கைது செய்யப்பட்டு பலரும் சிறையில் அடைக்கப்பட்டார்கள்.

டில்லி ஆட்சியாளர்களின் மனம் புண்படுகிறது என்பதையிட்டு கொல்லப்பட்ட பல்லாயிரம் மரணங்களை சகித்துக் கொள்ளும்படி நாங்கள் பழக்கப்படுத்தப்பட்டோம்.

அழுது ஓய்ந்து நாங்கள் மௌனமானபோது உங்களின் எவரேனும் பெரும் தொகையான தமிழ் மக்கள் எஞ்சியிருக்கவில்லை முள்ளிவாய்க்காலில்.

அந்த 50 ஆயிரம் பேருக்கு என்ன நடந்ததோ என்பதை நினைக்கும்போது அய்யோ இந்தக் கொடுமைகளை தட்டிக் கேட்பதற்கு மனித விழுமியங்கள் மறந்து விட்டதே என்பதை நினைக்கும் போது உங்களின் கால்களில் விழுவதைத் தவிர நான் வேறு என்ன செய்ய முடியும்.

இதோ நடேசனின் உடலென்றும், புலித்தேவனின் உடலென்றும் பானுவின் உடலென்றும் ஒவ்வொன்றாய் எடுத்துக் காட்டுகிறார்கள் பேரினவாதிகள்.

ஆறு படங்களைக் காட்டி இவர்கள் 60 ஆயிரம் பேரைக் கொன்றதை மறைக்கப் பார்க்கிறார்கள்.

இந்தியா எழுதிக் கொடுத்த திரைக்கதையில் ஒரு பாதி அரங்கேறிக் கொண்டிருக்கிறது நந்திக்கடலில்.

நாமும் அவர்கள் காட்டுகிற படங்களை மட்டுமே பார்த்து அழுது கொண்டிருக்கிறோம்.

நமது கண்ணீர் பேசியே ஆக வேண்டிய இன்னொரு பகுதியை மறைத்து விடுகிறது.

அவர்களோ நமக்கு கண்ணீரை பரிசளித்து விட்டு ஈழத் தமிழினத்தை தடயமற்ற இனமாக மாற்ற முயற்சிக்கிறார்கள்.

கடைசி மூன்று நாட்களில் முள்ளிவாய்க்காலில் நடந்தது என்ன? இந்தக் கேள்வியை நாம் கேட்டாக வேண்டும்.

25 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் காயமடைந்திருப்பதாகவும் அவர்களை மீட்டு சிகிச்சை அளிக்கும் ஏற்பாடுகளைச் செய்யும் படியும் அனைத்துலக சமூகத்திடமும் கெஞ்சிக் கொண்டிருந்தாரே சூசை. அந்த 25 ஆயிரம் பேர் என்ன ஆனார்கள்?

அவர்களைச் சுற்றிலும் பதுங்குகுழிகளில் நான்கு நாட்களாக உணவில்லாமல் பதுங்கிச் சோர்ந்து கிடந்த 30 ஆயிரம் பேர் என்ன ஆனார்கள்.

கிட்டத்தட்ட ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் அனைத்துலக சமூகம் தங்களை வந்து காப்பாற்றும் அதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருகிறது என்று நம்பினார்கள்.

உலகம் எவ்வளவோ கதைகளைச் சொன்னது இதோ அதோ என்று யாராவது போய் அந்த மக்களைக் காப்பாற்றி விடமாட்டார்களா? என்று நம்பினோம்.

அமெரிக்க கடற்படையின் பசுபிக் பிராந்திய தளபதி திமேத்தி ஜி கேட்டிங் தலைமையிலான அமெரிக்க கடற்படை போர் வலயத்துக்குள் நுழைந்து மக்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபடும் என்ற செய்திகள் பரவிய நிலையில் திமேத்தியை டில்லிக்கு அழைத்தாரார்களாம் இந்தியக் கடற்படைத் தளபதி சுரேஷ் மேத்தாவும் எம்.கே.நாராயணனும், ஏ.கே அந்தோனியும், சிவசங்கரமேனனும்.

அமெரிக்க தளபதியிடம் இந்திய - அமெரிக்க இராணுவ கடற்படை உறவு குறித்துப் பேசினார்கள்.

இலங்கையில் தலையிட முடியாத சூழலை எடுத்துச் சொல்லி அவரைத் தடுத்தார்களாம்.

அப்படி அமெரிக்க கடற்படை தடுக்கப்பட்ட இரவிலோ அல்லது அதற்கு மறுநாளோ மூன்றாவது ஒரு நாட்டின் அறிவுறுத்தலின் படி சிங்களப் படைகளிடம் சமரசம் பேசப் போன நடேசன் உட்பட பல மூத்த தளபதிகள் கொல்லப்பட்டார்கள்.

நடேசனின் மனைவியும் கொடூரமான முறையில் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்.

இவர்களோடு பிரபாகரன் அவர்களின் மகன் சார்ள்ஸ் அன்டனியும் கொல்லப்பட்டிருக்கிறார்.

இவர்கள் மட்டும்தான் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டார்களா?

அந்த போர்ப் பகுதியில் இருந்து மீண்டு வந்ததாகச் சொல்லப்படும் மக்கள் மட்டும்தான் அங்கு இருந்தார்களா?

கடந்த ஜனவரி மாதம் கிளிநொச்சி படையினரிடம் விழுந்த போது  போராளிகளோடு போராளிகளாக கிளம்பிப் போனவர்கள் முன்றரை  லட்சத்திற்கும் அதிகான மக்கள் என்கிறது தகவல்கள்.

ஆனால் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ப்ரணாப் முகர்ஜி நாடாளுமன்ற விவாதத்தில் பேசும் போது 70 ஆயிரம் பொதுமக்கள் போர்ப்பகுதிகளில் சிக்கியிருக்கிறார்கள் என்றார்.

இரண்டு மாதங்கள் கழித்து ஒரு லட்சத்து 92 ஆயிரம் மக்கள் போர்ப் பகுதிகளில் இருந்து முகாம்களுக்கு வந்தார்கள் என்றது ஐ.நா.வின் அறிக்கை. அதையே ஓபாமாவும் சொன்னார்.

இப்போது போர் முடிந்து விட்டதாக இலங்கை அரசு அறிவித்து விட்ட சூழலில் 70 ஆயிரம் பேர் முகாம்களுக்கு வந்து விட்டதாகச் இலங்கை அரசு சொல்கிறது என்றால் ப்ரணாப் முகர்ஜி சொன்ன 70 ஆயிரம் பேர் என்கிற கணக்கு இந்த நான்கு மாதங்ககளுக்குள் குட்டி போட்டா இத்தனை லட்சமாக ஆனது?

அது மட்டுமல்லாமல் பல லட்சம் மக்கள் போர்ப் பகுதிக்குள் இருக்க இந்தியாவின் அறிவுரைப்படி வெறும் 70 ஆயிரம் பேருக்கு மட்டுமே உணவை அனுப்பிக் கொண்டிருந்தது இலங்கை அரசு.

பட்டவர்த்தனமாக இந்த இன அழிப்பில் ஈடுபட்டிருக்கும் இந்திய வெளிவிவாகரத்துறை அமைச்சர் ப்ரணாப் முகர்ஜி இந்தப் போர் தொடர்பாக அனைத்துலக விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டியவர்.

கிளிநொச்சியில் இருந்து கிளம்பிப் போன தமிழ் மக்கள் மூன்றரை லட்சம் பேர் எங்கே என்று கேட்டால் அந்தக் கேள்விக்கு பதில் சொல்லியாக வேண்டிய பொறுப்பு இந்திய - இலங்கை அரசுகளுக்கு உண்டு.

70 ஆயிரம் பேர்தான் போர்ப் பகுதிகளுக்குள் சிக்கியிருக்கிறார்கள் என்று ஒரு நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் பொய் சொல்கிறார் என்றால் சர்வதேச போர் குற்ற நீதிமன்றத்தில் அவரும் நிறுத்தப்பட வேண்டியவர்தான்.

ஆனால் சீக்கிய மக்களையும் காஷ்மீரிகளையும் இழிவுபடுத்தியதைப் போல எந்தப் பதிலும் சொல்லாமல் வழக்கம் போல ஏளனத்தை மட்டுமே பதிலாக ஈழத் தமிழர்களுக்கு தருவார்கள் என்றால் அதற்கு பழி தீர்க்கும் கடமை ஒவ்வொரு தமிழனுக்கும் உண்டு என்று பாதிக்கப்பட்ட தமிழன் நம்பக்கூடும். நம்பிக்கைகள் வலுப்பெறக் கூடும்.

உண்மை ஒன்றுதான் அவர்கள் பெரும் தொகையான மக்களையும் முக்கியமான போராளித் தலைவர்களையும் அவர்களின் குடும்பங்களையும் குழந்தைகளையும் சாட்சியமற்ற முறையில் கொன்றொழித்திருக்கிறார்கள்.

போர் முடிவுக்கு வந்து விட்டதாகவும் போராளித் தலைமையை அழித்து விட்டதாகவும் சொல்லும் இலங்கை அரசு முள்ளியவாய்க்காலில் ஒரு துடைத்தழிப்பு வேலையில் வெகுவேகமாக ஈடுபட்டிருக்கின்றது.

இதை விட்டு விட்டு பிரபாகரன் என்று சொல்லப்படும் ஒரு வீடியோவையோ ஒளிப்படத்தையோ காட்டி ஈழத் தமிழ் மக்களின் சுயநிர்ணய விடுதலைப் போரை மௌனமாக்கி விட முடியாது.

உளவியல் ரீதியாக இலங்கையும் இந்தியாவும். அதன் ஆங்கில ஊடகங்களும் தொடர்ந்து கக்கிவரும் வல்லாதிக்க பேரினவாத பிரச்சாரத்திற்கு எதிரான எதிர்ப்பிரச்சாரமாக நாம் ஒன்று கூட வேண்டும்.

சாட்சியமற்ற முறையில் கொல்லப்பட்டிருக்கும் ஒரு லட்சம் மக்களின் உயிர்கள் குறித்து அனைத்துலக சமூகம் விழிக்கும் வரை நாம் போராட வேண்டும்.

உயிர்களை உடமைகளை பிள்ளைகளை பெற்றோர்களை என எல்லாவற்றையுமே இழந்து விட்ட மிச்சம் மீதியிருக்கும் மக்கள் முகாம்களுக்குள் முட்கம்பிகளுக்குள் முடக்கி வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

எட்டு மாதங்களாக தமிழகம் கத்திக் கதறியபோதும் போரை நடத்துவதில் தீவீரமாக இருந்த இந்தியா இப்போது முகாம்களுக்குள் முடங்கியிருக்கும் மக்களுக்கான முழு நிவாரணங்களையும் ஏற்றுக் கொள்ளப் போகிறதாம். அதற்கு தமிழகமும் தன்னால் ஆன பங்களிப்பைச் செய்யுமாம்.

பட்டினியால் போர்ப் பகுதிக்குள் சிக்கிய மக்களுக்கு உணவு அனுப்பும்படிக் கேட்டோம் அனுப்பவில்லை.

முள்ளிவாய்க்காலில் சிக்கி காயமடைந்திருக்கும் 25 ஆயிரம் மக்களை மீட்டு தமிழகத்தில் நிவாராண முகாம் அமைக்கும்படி கேட்டோம்.

இதே கோரிக்கையை செஞ்சிலுவைச் சங்கத்தின் தமிழ்நாட்டு கிளையும் வைத்தது. அதையும் செய்யவில்லை.

இப்போது முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டிருக்கும் பல்லாயிரம் மக்கள் குறித்தும் இனப் படுகொலைக்கு துணைபோன சகல தரப்புமே தண்டிக்கப்பட வேண்டும் என்று கேட்கிறோம்.

ஆனால், வேடிக்கை யார் இந்த இனப்படுகொலை செய்தார்களோ அவர்களே இப்போது நிவாரணங்களை கொடுக்கிறார்களாம்.

பெருமளவு இந்திய தமிழக மக்களின் வரிப்பணங்களில் அனுப்பப்படும் இவ்விதமான நிவாரணங்களை முடமாக்கப்பட்டு முட்கம்பி வேலிகளுக்குள் முடக்கப்பட்டிருக்கும் விருப்பப்பட்டு வாங்குவார்கள் என்று தெரியவில்லை.

மாறாக அச்சுறுத்தி அவனை அடக்கம் செய்வதற்கான சவப்பெட்டிகளை தயாரிக்க இந்தியா 500 கோடி ரூபாயை அனுப்பி வைத்திருக்கிறது.

இந்து மகா சமுத்திரத்தின் ஆதிக்கப்போட்டியில் பங்கெடுக்கும் ரஷ்யாவும் கொடுத்தது, சீனாவும் கொடுத்தது எல்லோரும் கொடுத்ததை விட இந்தியா கொடுத்த ஆயுதமும் அதிகம் ஆதரவும் அதிகம்.

இப்போது அந்த இனம் முடமாக்கப்பட்டிருக்கிறது.

30 ஆண்டு காலம் தாங்கள் நம்பிய தாயக விடுதலைக்காக களமாடிய பல இளைஞர்கள் கடைசி வரை போராடி களத்தில் வீரமரணம் அடைந்திருக்கிறார்கள்.

இப்போது எஞ்சியிருப்பது நானும் நீங்களும்தான் நாம் என்ன செய்யப் போகிறோம்.

வேலுப்பிள்ளை பிரபாகரன் கொல்லப்பட்டுள்ளார் என்கிற செய்தியை தொடர்ந்து சொல்வதன் மூலமும் ஒவ்வொரு நாளும் ஒரு மூத்த புலிப் போராளியின் உடலை காட்டுவதன் மூலம் 50 ஆயிரத்துக்கும் அதிகமான தமிழ் மக்களை கொன்று குவித்த கொலை பாதகத்தை, இன அழிப்பை மூடி மறைத்து விட நினைக்கிறது இலங்கை அரசு.

அதனூடே இனி எவனும் தமிழர் உரிமை என்றோ புலி இயக்கம் என்றோ இந்த மண்ணில் ஒன்று சேர்ந்து விடக்கூடாது என்றும் திட்டமிட்டு நேரடியாகவே மிரட்டிக் கொண்டிருக்கிறது இலங்கை அரசு.

கடந்த இரண்டு நாட்களாக இலங்கை அரசு இயந்திரங்கள் முள்ளிவாய்க்காலில் மேய்ந்து அந்த மண்ணை நீள அகலமாக உழுது தடையங்களை அழித்துக் கொண்டிருக்கிறது.

நாம் அது பற்றி கேள்விகளைக் கேட்கக்கூடாது என்றுதான் நம் உளவியலைச் சிதைக்கும் ஒளிப்படங்களைத் தொடர்ந்து வெளியிட்டபடி இருக்கிறார்கள்.

மென்மையான போக்கோடு இதுவரை இலங்கை அரசை கண்டித்து வந்த மேற்குலகம் வீதிகளில் திரண்டு நிற்கும் எமது தமிழ் மக்களுக்கு உரிய பதிலைச் சொல்ல வேண்டும்.

உங்களுக்கு எமது மக்களால் ஏற்படுத்தப்படும் அழுத்தங்களால் நீங்கள் இலங்கை அரசுக்கு கொடுக்கும் அழுத்தங்களுக்கு அடிபணியப்போவதில்லை என்று இலங்கை அதிபர் அறிவித்திருக்கிறார்.

அப்படி என்றால் யார்தான் இதற்குப் பொறுப்பாளி. புலிகளின் ஆயுதப் போராட்டத்தை நசுக்கி விட்டதாகவும் புலிகளின் தலைமையை அழித்து விட்டதாகவும் சொல்லி போர் முடிவுற்றதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி பிரச்சனையை கிடப்பில் போட நினைக்கிற சிங்களப் பேரினவாத அரசுக்கு உரிய தண்டனை வழங்கப்படா விட்டால் நாளை இப்பிராந்தியத்தில் இது தொடர் கதையாகும்.

புலிகள் அழிக்கப்பட்டதை ஒப்புக்கு ஏற்றுக்கொண்டால் கூட ஒரு நீண்டகால இனப்பிரச்சனையின் போராட்ட வளர்ச்சியில் புலிகளின் ஆயுதப் போராட்டம் என்பது 30 ஆண்டுகாலப் போராட்டமே.

சாதகமும் பாதகமுமான அந்தப் போரின் இறுதிக் கட்டத்தில் கடைசி வரை அஞ்சாமலும் அடிபணியாமலும் எதிரிகளிடம் அடங்கமறுத்து வீரச்சாவடைந்திருக்கிறார்கள் போராளிகள். இன்னும் போராளிகள் மிச்சமிருக்கிறார்கள்.

19 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் தோன்றிய தமிழர் சிங்களர் இன முரணுக்கும் இலங்கைத் தீவில் தமிழர்கள் வஞ்சிக்கப்பட்டதற்கும் நூற்றாண்டு கால வரலாறு எப்படி உண்டோ அது போலவே தமிழர் விடுதலைப் போரின் சாத்வீக, ஆயுதப் போராட்ட வரலாறும் இந்தக் காலங்களை ஒட்டியே கடந்து வந்துள்ளது.

ஆக, களமாடி மடிந்த வீரத் தியாகிகளுக்கு மனித குலத்தின் ஆகப்பெரிய மரியாதையை நாம் வழங்காமல் போவது களமாடி மடிந்த கிட்டத்தட்ட 20 ஆயிரம் போராளிகளுக்கு நாம் செய்கிற துரோகம் என நினைக்கிறேன்.

ஆனால் இனத்தை அழித்து போரைச் சிதைத்து மக்களை முகாம்களுக்குள் முடக்கி விட்டு இந்தியா 13 ஆவது சட்டத் திருத்தத்தின் கீழ் ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வைத் கொடுப்பேன் என்று நாடகம் ஆடிக் கொண்டிருக்கிறது.

இந்தியத் தமிழர்கள் உட்பட எந்தத் தமிழரும் இந்திய - இலங்கையின் இந்த நாடகத்தை நம்புவதற்கு தயாராக இல்லை என்பதோடு ஒட்டுமொத்த தமிழினமும் இந்திய, இலங்கைத் தலைமைகளுக்கு ஒரு செய்தியைச் செல்ல வேண்டிய தருணம் வந்திருக்கிறது.

அவர்கள் பிரச்சனை முடிந்து விட்டது என்கிறார்கள். தமிழ் மக்களோ பிரச்சனை முடியவில்லை போராட்டம் அல்லது, போர் தொடரும் என்று அறிவிக்கக் காத்திருக்கிறார்கள்.

நூற்றாண்டு கால விடுதலைப் போர் இன்னும் முடியவில்லை.

வஞ்சிக்கப்பட்ட மக்களை மேலும் மேலும் பழிதீர்த்து அதை வெற்றிக் களியாட்டங்களாக மாற்றி பெரும்பான்மை சமூகத்தின் ஏளனப் பொருளாகி விட்ட எமது தமிழ் மக்கள் இந்தியாவிற்கு விடுக்கும் செய்தி அதுதான். ஆமாம் போராட்டம் தொடரும்.


நடேசன், புலித்தேவன் மற்றும் தளபதி ரமேஸ் சரணடைய முற்பட்டபோது நடந்த அந்த துரோகச்செயல் என்ன?

ஆயிரம் வீரர்கள் தீயினில் போயினர்
ஆயினும் போரது நீறும், புலி
ஆடும் கொடி நிலம் ஆறும்.
பேயிருள் சூழ்ந்திடும் கானகம் மீதினில்
பாசறை ஆயிரம் தோன்றும், கருப்
பைகளும் ஆயுதம் ஏந்தும்.
மத்தளம், பேரிகை, கொட்டு புலிப்படை
மாபெரும் வெற்றிகள் சூடும், அந்த
சிங்கள கூட்டங்கள் ஓடும்.

இணையத்தில் இன்று காலை நான் கண்ட கவிதை இது. எழுதியவர் புதுவை இரத்தினதுரையாக இருக்க லாம். படித்துச் சிலிர்த்து நின்ற வேளை தொலைபேசி அழைப்பொன்று வந் தது. கடந்த நான்கு நாட்களாய் தொலைபேசிய அந்த முக்கியமான வரை தொடர்பு கொள்ள நூறு முறையேனும் முயன்று மனக் களைப்புற்றிருந்தேன். களநிலை பற்றின பொய்யும் புனைவுமிலா உண்மையை தரவல்ல நிலையில் உள்ளவர் அவர். வானகத்தின் தூதுவன் நேரிடை வந்தது போல வந்தது அந்த அழைப்பு. அவர் சொன்னார்: “”கவலை ஏதும் வேண்டாம். தலைவர் பாதுகாப்பாக உள்ளார். அவருக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் முழுமையாக உறுதி செய்யப்பட்டபின் உலகோடு அவர் பேசு வார்”. தமிழீழ எல்லைகளின் காவலன் நல் லூர் முருகனும் எனது லூர்து மாதாவும் துணையிருந்தார்கள். படித்த கவிதை சந்தம் கட்டி என் மனதில் பாடலாய் துள்ள லாயிற்று. “பேயிருள் சூழ்ந்திடும் கானகம் மீதினில் பாசறை ஆயிரம் தோன்றும், கருப்பை களும் ஆயுதம் ஏந்தும்’.

எட்டு பத்து ஆண்டுகளுக்கு முன் இதே புதுவை ரத்தினதுரை எழுதிய கவிதையின் மறக்க முடியாத சில வரிகள் நினைவு வெளியில் கை வீசி நடந்தன.

“”வா பகையே… வா…
வந்தெம் நெஞ்சேறி மிதி.
பூவாகவும் பிஞ்சாகவும் மரம் உலுப்பிக் கொட்டு.
வேரைத் தழித்து வீழ்த்து.
ஆயினும் அடிபணியோம் என்பதை மட்டும்
நினைவில் கொள்!”

புதுவை ரத்தினதுரையின் கவிதைகள்பால் எனக்கு ஈர்ப்பு ஏற்பட்டது 1995-ம் ஆண்டு. அதிபர் சந்திரிகா குமார துங்கே யுத்த வெறி கொண்டு முப்படைகளையும் அவிழ்த்து விட்டு யாழ்ப்பாணத்தை சிறைப்படுத்திய காலம். யாழ்ப்பாணத்தில் சிங்க முத்திரை பொறித்த சிங்களக் கொடியை ஏற்ற அன்றைய ராணுவ அமைச்சர் அனுருத்த ரத்வத்தே வந்தார். அக்கொடியை சுமந்து வந்தது யாழ்ப்பாணத்து மேயராக இருந்த தமிழர். பெயர் மறந்துவிட்டேன். வடதமிழீழத்து இதயமாம் யாழ்ப்பாணத்திற்கு சிங்கக் கொடி சுமந்து வந்த மேயர் மீது புதுவைக்குச் சீற்றம். நீண்ட கவிதையொன்று எழுதியிருந்தார். இரண்டு வரிகள் மட்டும் அடித்த ஆணிபோல் நினைவில் பதிந்து நிற்கின்றன.

“”மேயர் அவர்களே
நீவிர் சிங்கக் கொடியை சுமந்து வந்தபோது
மின்னும் ஜரிகை கரை கொண்ட
பட்டு வேஷ்டி கட்டி வந்ததாய் அறிந்தேன்.
கக்கூஸ் வாளிக்கு தங்க முலாம் பூசுவதில்லையே?!

அறுபதாயிரத்திற்கும் மேலான அப்பாவித் தமிழ் உயிர்களை கொன்றழித்து, இரண்டரை லட்சம் பேரை சொந்த மண்ணில் அகதிகளாக்கி, முப்பதாண்டு கால விடுதலைப் போராட்டத்தை நீசத்தனமாய் நிர்மூலம் செய்த ராஜபக்சே கும்பலுக்கு வன்னிப்பரப்பில் சிங் கக் கொடி தூக்க நாக்கை தொங்கவிட்டுக் காத்திருக்கும் ஆனந்தசங்கரி வகையறாக்கள் ஒரு கணம் நினைவுக்கு வந்தபோது புதுவையின் கவிதையும் உடன் சேர்ந்து வந்தது. “”கக்கூஸ் வாளிகளுக்கு தங்க முலாம் பூசுவதில்லையே…?! ராஜபக்சேக்களுக்கு லாவணி பாடும் ஆனந்த சங்கரிகளே இருக்கிறவரை ஏதேனும் நாற்காலியில் இருந்துவிட் டுப் போங்கள். தங்க முலாம் பூசிய கக்கூஸ் வாளிகளுக்கும் கருணை செய்து ஓய்வூதியம் தர வேலுப்பிள்ளை பிரபாகரன் விரைவில் வருவான். உங்களுக்காக வரவில்லையென்றாலும் முல்லைத்தீவு முற்றுகையின் கடைசி நாள் நடந்த மன்னிக்க முடியா துரோகத்திற்கு நீதி செய்யவேனும் அவன் வருவான்.

கடைசி நாளில் -அதாவது கடந்த சனிக்கிழமை நடந்தது இதுதான். வேலுப்பிள்ளை பிரபாகரனும் எதிர்காலத்தில் போராட்டத்தையும் இயக்கத்தையும் மீள் கட்டமைப்பு செய்வதற்கு முக்கியமானவர்களான சில தளபதியர்களும் பாதுகாப்பாக அகன்றபின் களத்தின் இறுக்கம் தணிகிறது. கை ஒடிந்து, கால் முறிந்து, உடலின் சில பகுதிகள் சிதைந்து ரத்தம் வழிந்தே பாதி செத்துப் போன சுமார் 12,000 அப்பாவி மக்களையும், அவ்வாறே காயமுற்ற சுமார் 3,000 போராளிகளையும் எப்படியேனும் அப்புறப்படுத்திக் காப்பாற்றும் முடிவினை விடுதலைப்புலிகள் எடுக்கி றார்கள். கடற் புலித் தளபதி சூசை மதுரையில் ஒருவரோடு தொடர்பு கொண்டு காயமுற்ற மக்களையேனும் பாதுகாப்பாய் வெளியேற்ற 48 மணி நேர சண்டை நிறுத்தம் வேண்டுகிறார்.

மதுரை தமிழரோ உணர்வாளர் சுப.வீ. என்ற சுப.வீரபாண்டியன் அவர்களை மன்றாட சுப.வீ. அவர் கள் கனிமொழி அவர்களின் கருணையை கேட்கிறார். கனிமொழி அவர்கள் காங்கிரஸ் கட்சியின் முக்கியமான ஒருவரோடு பேச “அதிகாரப்பூர்வமற்ற’, ஆனால் யதார்த்த மான முடிவொன்று தரப்பட்டது. “”விடுதலைப் புலிகளின் அனைத்துலக பொறுப்பாளர் செல்வராஜா பத்மநாபன் கொழும்பிலுள்ள இந்திய தூதுவருக்கு ஆயுதங்களை ஒப்படைக்க தயாராக உள்ளோம் என்ற முடிவினை எழுத்துப் பூர்வமாய் தொலைநகல் (எஆல) வழி உடனே தெரிவிக்க வேண்டும். மற்றவையெல்லாம் இந்தியா பார்த்துக் கொள்ளும்”. இரவு 10 மணி ஆயிற்று. இந்தக் கட்டத்தில் நானும் இணைந்தேன். லண்டனிலுள்ள எனது நண்பர்கள் மூலம் செல்வராஜா பத்மநாபன் அவர்களுக்கு தகவல் சொல்லப்பட அவரும் மின்னல் வேகத்தில் இயங்கினார். “”இந்தியாவிடமே நாங்கள் ஆயுதங்களை ஒப்படைக்கத் தயாராக இருக்கிறோம். அது சாத்தியமில்லையென்றால் ஐ.நா. ஏற்பாட்டில் ஒப்படைக்கிறோம்” என்ற முடிவை விடுதலைப் புலிகள் இரவு 11.50-க்குத் தெரிவித்தார்கள். கனிமொழி தயக்கத்துடன் காங்கிரஸ் பெரியவரை தொடர்பு கொள்ள அவரும் விழித்தே இருந்தார். “”கால அவகாசமில்லை. இந்தியாவிடம் சரணடைவதற்கான சாத்தியப்பாடுகள் இப்போது இல்லை. இலங்கை ராணுவத்திடமே சரணடைவதுதான் இப்போதைய நெருக்கடி நிலையில் ஆகக் கூடியது” என்கிறார் அப்பெரியவர்.

மக்களை காக்க வேண்டி இலங்கை ராணு வத்திடமே ஆயுதங்களை ஒப்படைக்கும் முடிவினை சனி நள்ளிரவு புலிகள் எடுத்தார்கள். ஞாயிறு காலை கொழும்பு இந்திய தூத ரகத்தின் உதவியுடன் இலங்கைத் தமிழர் பாராளுமன்ற உறுப்பினர் கஜன் பொன்னம்பலம் ராஜபக்சேவோடு பேச்சுவார்த்தை கள் நடத்த முடிவொன்று ஏற்படுகிறது. “முல் லைத்தீவு களத்தில் நிற்கும் புலிகளின் தளபதிகள் வெள் ளைக்கொடி பிடித் துக் கொண்டு இலங் கை தளபதிகளிடம் வரட்டும். ஆயுதங் களை ஒப்படைப்பது, காயமுற்றோரை அப்புறப்படுத்துவது தொடர்பான நடைமுறை ஒழுங்குகளை அவர்களே கலந்து பேசி முடிவு செய்யட்டும்’ என்பதாக அந்த ஏற்பாடு.

இம்முடிவினை ராஜபக்சே அலுவலகம் ராணுவத் தலைமைக்கும், முல்லைத் தீவு கட்டளைத் தளபதிகளுக்கும் அறிவிக்கிறது. இந்த ஏற்பாடுகள் முடியவே ஞாயிறு இரவாகி விடுகிறது.

ராஜபக்சேவுடன் நடந்த விவாதங்களையும் முடிவுகளையும் கஜன் என்ற கஜேந்திரன் பொன்னம்பலம்… செல்வராஜா பத்மநாபனுக்குத் தெரிவிக்க முல்லைத்தீவு களத்தில் நின்ற விடுதலைப் புலிகளின் அரசியற் பிரிவுப் பொறுப்பாளர் நடேசனுடன் இவற்றை திங்கள் அதிகாலை 2.30 மணிக்கு விவாதிக்கிறார் பத்மநாபன். யுத்தம் 500 மீட்டர் அருகில் வந்த போதும் கூட உலகோடு உரையாடும் செயற் கோள் வசதிகளை விடுதலைப்புலிகள் கொண்டிருந்தார்கள் என்பது ஒரு ராணுவ அரசியல் இயக்கமாக எத்துணை ஆழமாக வளர்ந்திருந்தார்கள் என்பதற்குச் சான்றாகத் தெரிந்தது. விடிந்ததும் நடேசன், சிறப்புத் தளபதி ரமேஷ் -இவர் முன்பு கருணாவின் துணை தளபதியாக இருந்தவர், புலிகளின் சமாதானச் செயலகப் பொறுப்பாளர் புலித்தேவன் மூவரும் வெள்ளைக் கொடி ஏந்தி சிங்களத் தளபதியர்களை சந்திக்கச் செல்வ தாய் ஏற்பாடு.

வெடிபொருள் புகை கவிந்த முல்லைத் தீவு பரப்பு விடிந்தது. வெள்ளைக் கொடி ஏந்தி மூவரும் நடந்தார்கள். சிங்களத் தளபதியர்களின் கூடாரம் அருகே வந்தார்கள். ஏன், என்னவென்ற பேச்சின்றி சுட்டுக் கொல்லப்பட்டார்கள். பின்னர்தான் தெரிய வந்தது அவர்களைச் சுட்டுக் கொல்லும் உத்தரவை ராஜபக்சேவின் சகோதரனும் ராணுவ அமைச்சருமான கோத்தபய்யா ராஜபக்சே பிறப்பித்திருந்த சதி.

வெள்ளைக் கொடியேந்தி சரணடையவோ, பேச்சுவார்த்தை நடத்தவோ வருகிறவர்களுக்குத் தீங்கிழைப்பது யுத்தக் குற்றம். அனைத்துலக சட்டதிட்டங்கள் இதனை கடுமையாக வலியுறுத்துகின்றன. ஆனால் சிங்கள இனவெறி பிடித்தாடும் கோத்தபய்யாவை பொறுத்தவரை தமிழருக்காகப் பேச எவருமே உயிரோடு இருக்கக்கூடாது. நடேசனும், புலித்தேவனும் சரணடைந்து கைது செய்யப்பட்டாலும் அவர்கள் யுத்தக் கைதிகளாகவே நடத்தப்பட வேண்டும். நாளை அனைத்துலக ஏற்பாட்டில் அரசியல் தீர்வுக்கான பேச்சுவார்த்தைகள் தொடங்கும் போது புலிகள் தரப்பிலும் பிரதிநிதிகள் இருக்க வேண்டுமென உலக நாடுகள் நிச்சயம் வலியுறுத்தும். அத்தகு சூழலில் தகுதியோடு தமிழரை பிரதிநிதித்துவப்படுத்த எவருமே இருக்கக்கூடா தென்பதுதான் கோத்தபய்யாவின் கணக்கு. முக்கிய செய்தி என்னவென்றால் இந்தியா சொல்வதையோ, அண்ணன் ராஜபக்சே சொல்வதையோ கேட்பதற்கு கோத்தபய்யா தயாராக இல்லை என்பதுதான்.

கொடுமை அத்தோடு முடியவில்லை காயமுற்று பாதி உயிரோடு முனகிக் கிடந்த பத்தாயிரத்திற்கும் மேலான அப்பாவி மக்களை புல்டோசர்கள், செயின் புளக்-கள் ஏற்றிக் கொன்றுவிட்டு ஆதாரங் கள் ஏதுமின்றி அதிநவீன ரசாயனக் கலவைகள் ஊற்றி எரித்திருக்கிறார்கள். அவ்வாறே காய முற்றிருந்த சுமார் 3,000 போராளிகளையும் கரு ணை இரக்கமின்றி சுட்டுக் கொன்று வெறி தீர்த்திருக்கிறார்கள். வேறெதற் கும் இல்லையெனினும் கோத்தபய்யாவிற்கு நீதி சொல்லவேனும் வேலுப்பிள்ளை பிரபாகரன் வருவான், நிச்சயமாய் வருவான்.

மரணத்தின் நிழலில் வளர்ந்த அதீதப் பிறவி பிரபாகரன். மாத்தையா அவரது வாகனத்திற்கு அடியிலேயே வெடிகுண்டு பொருத்தினார். ஆனால் வெடிக்கவில்லை. ஏன் வெடிக்கவில்லை என்பதற்கு மனித அறிவு சார்ந்த விளக்கம் எதுவுமில்லை. சாவகச்சேரி நகர் வளைவு திறக்கும் நிகழ்வின் போது அவரோடு மூத்த தளபதிகள் யாவரதும் கதை முடிக்க மாத்தையா ஏற்பாடு செய்திருந் தார்.

விழாவுக்குப் புறப்படும் போது மோசமான வயிற்று நோவு வர விழாவிற்கு அவர் வரவில்லை. வந்திருந்தால் அன்றே அவர் வரலாறு முடிந்திருக்கும். திருநெல்வேலி தாக்குதலின் போது அவரது துப்பாக்கியில் ரவை தீர்கிறது. குனிந்து ரவை நிரப்புகிறார். புறத்தே மின்னல் தெரிகிறது. சக தோழர்களின் பறக்கிற ரவைகள் என நினைக்கிறார். காலையில் பார்த்தால் தான் குனிந்தபோதுதான் நின்ற இடத்திலேயே எதிரியின் ரவைகள் பாய்ந்து வந்திருக்கின்றன. அக்கணம் குனிந்திராவிட்டால் அன்றே அவர் முடிந்திருப்பார். “”கடவுள் காத்து வருகிறார் எனக் கருதலாமா?” என 2002-ல் அவரிடம் கேட்டேன். “”இன்னும் நான் செய்ய வேண்டிய கடமைகள் இருக்கிறதென இயற்கை நினைக்கிறது போலும்” என்றார். தமிழர்களே, நண்பர்களே, முல்லைத்தீவில் கதை முடிய வில்லை. புதிய கதை தொடங்குகிறது. உலகத் தமிழினம் இனி நடக்கப் போவது புதிய தடங்களில்.

அருட்தந்தை ஜெகத்கஸ்பர்


இனி அகதிகள் கதி என்ன?

தொடர்ந்து சிங்கள அரசும், இந்திய அரசும், ஊடகங்களும் பிடிவாதமாக பிரபாகரனும், புலிகள் இயக்கமும் அழிந்து விட்டதாக சாதிக்க முயல்கின்றன. இடையிடையே வெகு சில ஊடகங்கள் அப்படியொன்றும் நடந்து விடாது என்ற நம்பிக்கையை பற்பல ஊகங்கள் மூலமும், உலாவரும் ஆதாரங்களின் மீதான சந்தேகங்கள் மூலமும் உயிர்ப்பிக்க முனைகின்றன. நிறைய அஞ்சலி கட்டுரைகள் - சில நிஜமான ரத்தக்கண்ணீரோடும், சில உள்ளுக்குள்ளே எழும் நிம்மதி பெருமூச்சை அடக்கிக் கொண்டும் எழுதப்பட்டு இணையமெங்கும் இறைக்கப் பட்ட வண்ணம் இருக்கின்றன.

போர் ஓய்ந்து விட்டதா என்று CNN கருத்துக் கணிப்பு நடத்துகிறது. பிரபாகரன் என்ற ஒற்றை மனிதனையோ, புலிகள் என்கிற ஒற்றை இயக்கத்தையோ அழித்துவிட்டால் அத்தோடு ஒரு சுதந்திர போராட்டம் ஓய்ந்து விடும் என்கிற எண்ணமே ரொம்ப சிறுபிள்ளைத் தனமானது. பல் வேறு இனத்தவர் கூடி வாழும் இடத்தில் ஒரு குழுவுக்கு ஆதிக்க வெறி ஏற்பட்டு விட்டால், அதற்கு இரண்டே தீர்வுகள்தான் சாத்தியம். ஒன்று மற்றவர்கள் அக்குழுவை பிரிந்து வாழ்வது, அல்லது இருக்கும் இரண்டு இனத்தில் ஏதேனும் ஒன்று மிச்சம் மீதியில்லாமல் அழிந்து போவது. எந்த மனித இனமும் காலகாலத்துக்கும் அடிமை வாழ்வை ஏற்றுக் கொண்டு வாழ்ந்து தீர்க்க முடியாது. எனவே தமிழினத்தில் கடைசி மனிதன் மிச்சமிருக்கும் வரை என்றேனும் ஒரு நாள் இன்னொரு போராட்டம் வந்தே தீரும். அது அகிம்சை வழியிலானதா, ஆயுத வழியிலானதா, ஆயுத வழியெனில் யார் வழி நடத்துவார்கள் என்பது போன்ற கேள்விகளுக்கெல்லாம் பதில் காலத்தின் கரங்களுக்குள் நிச்சயம் இருக்கும்.

ஆனால், அதற்கெல்லாம் முன்னால் இன்று நமக்கு பெரும் சவால்கள் பல காத்திருக்கின்றன.தமிழ்நாட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட அகதிகள் முகாம்களில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர் அகதிகளாக அடைப்பட்டுள்ளதாக சில புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அதே போல இந்தியாவுக்கு வெளியே வெவ்வேறு நாடுகளில் பல லட்சம் மக்கள் அகதிகளாக வாழ்கிறார்கள். வெளிநாட்டில் அகதிகளாக வாழும் தமிழர்களின் நிலை கொஞ்சமேனும் கண்ணியத்துடன் இருப்பதாக அம்மக்களின் எழுத்துக்களின் மூலம் அறியமுடிகிறது. அதே சமயம் தன் தொப்புள் கொடி உறவென நம்பிக்கையோடு தமிழகத்துக்குள் வந்தவர்கள் அடைபட்டுக் கிடக்கும் முகாம்களின் நிலமை என்னவாக இருக்கிறது?

காலையிலும், மாலையிலும் கையெழுத்திட்டு தன் இருப்பை உறுதி செய்து கொள்ளும் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்த குற்றவாளிகள் போல, அகதி முகாமில் இருப்பவர்கள் வேலை காரணமாகவோ, படிப்பின் காரணமாகவோ வெளியில் செல்பவர்கள் கூட மாலைக்குள் திரும்பி விட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். ஒரு நாள் இரவு கூட வெளியே தங்குவதற்கு அனுமதிக்கப் படுவதில்லை.

போதிய கழிப்பிட வசதியோ, மின்சார வசதியோ இல்லாமல் அம்மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருவது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? வெளியிலிருந்து முகாமிற்குள் எடுத்துச் செல்லப் படும் எல்லா உடமைகளும் கடுமையான சோதனைக்குப் பிறகே அனுமதிக்கப் படுகின்றன – அது காய்கறி பழம் வாங்கிய பையாக இருந்தாலும். புதிதாக வரும் அகதிகளிடம் சோப்பு, செண்ட், பாலிஸ்டர் துணி வகைகள், கடிகாரம் போன்றவற்றை அபகரிக்கவோ அல்லது விலை குறைத்து வாங்கிக் கொள்ளவோ நம் மக்கள் எப்போதும் தயாராகவே இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் வாழ்கை நிலை மேம்பட நாம் என்ன செய்து விட்டோம்?

இலங்கையிலிருந்து அகதியாக வந்த ஒரு வாலிபர் ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுத்து வரும் பிரபலமான ஒரு அரசியல் கட்சித் தலைவரின் நிறுவனமொன்றில் வேலை கேட்டு விண்ணப்பிக்க, புலியாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் அந்த வாலிபருக்கு வேலை மறுக்கப் பட்டது.

புலிகளை முற்றாக அழித்துவிட்டோம் என ராஜபக்ஷே அரசு சொல்லியிருக்கிறது. இதுதான் சமயமென ஒரு வேளை தமிழகத்திலிருக்கும் அகதிகள் திருப்பி அனுப்பப் படலாம். ஆனால் சர்வதேச சமூகமோ அகதியாக நாடிழந்தவன் தன் சொந்த நாட்டிற்கு திரும்பிப் போக விரும்புகிறானா இல்லையா என்பதை அறிந்தே அனுப்ப வேண்டும். அதை விடவும் அப்படித் திரும்பிப் போகும் அகதிகள் சுதந்திரமாய் உயிர் வாழக் கூடிய சூழ்நிலை அங்கே நிலவுகிறதா என்பதை ஆய்வு செய்த பின்னரே அனுப்ப வேண்டும் எனவும் சொல்கிறது.

சரி, இந்தக் கருத்து கனடா, ஜெர்மன் போன்ற மற்ற மற்ற நாடுகளுக்குச் சரி. அவர்கள் எல்லோருக்கும் இலங்கையில் நடக்கும் பேரழிவு பற்றித் தெரிந்திருக்கிறது. ஆனால் இந்தியாவின் நிலை என்ன? புத்தரின் கருணை வெள்ளம் இலங்கையின் இண்டு இடுக்குகளில் எல்லாம் வழிந்து ஓடுவதாகவும், ராஜபக்ஷே என்பவர் ஒரு மஞ்சளாடை அணியாத புத்த பிக்கு எனவும் நம்பும் அல்லது நம்புவதாகச் சொல்லிக் கொள்ளும் மதியூக மந்திரிகளும், வெளியுறவுத் துறை செயலாளர்களும், நடு நிலை நாளேடுகளின் அதிபர்களும் அல்லவா இங்கே வெளியுறவுக் கொள்கையை முடிவு செய்கிறவர்களாக இருக்கிறார்கள்? அவர்கள் நாளையே, அகதி முகாம்கள் என்ற பெயரில் இங்கே இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு மாறு பட்ட சிறை வடிவத்தில் அடைந்து கிடக்கும், கேட்க நாதியில்லாத மக்களை  தேனாறும் பாலாறும் பாய்ந்தோடி வளம் கொழிக்கும் அவர்களின் அன்னை பூமிக்கு திரும்பிச் செல்லுங்கள் என்று நிர்பந்திக்க மாட்டார்கள் என்று என்ன நிச்சயம்?

அப்படி ஒரு நிலை வந்தால் அன்று மட்டும் என்ன செய்து கிழித்துவிடப் போகிறோம் நாம்? நம் தலைவர்கள்தான் என்ன செய்து விடப் போகிறார்கள்? அவர்களுக்கு அடுத்த தேர்தல் கூத்திற்கு இன்னமும் இரண்டு வருட அவகாசம் இருக்கிறது. அப்படியே நாளையே தேர்தல் என்ற நிலை வந்தாலும் கூட இரண்டு வேளை உணவுக்கு இடைப் பட்ட நேரத்து உண்ணா நிலை போதும், அனுதாபத்தை அள்ளவும், இப்பிரச்சனையில் தமக்கிருக்கும் அனுதாபத்தைக் காட்டவும். அதற்கும் மேல் சேர்த்து வைத்திருக்கும் செல்வத்திலிருந்து ஒரு சில துணுக்குகளை வாரியிறைத்தால் போதும், உத்திரவாதமாக நம் மக்கள் பொத்தாங்களை அழுத்தி வாங்கிய காசுக்குத் தம் விசுவாசத்தை நிரூபித்து விடுவார்கள்.

அவ்வளவு தூரமெல்லாம் போவானேன்? முதலில் இப்படி ஒரு இடப் பெயர்வு நடப்பதாகவே மக்களில் பெரும்பாலானோர்க்குத் தெரிய வாய்ப்பில்லை. இருக்கும் ஊடகங்கள் எல்லாம் கைகட்டி வாய் புதைத்து வேடிக்கை பார்த்திருக்கும், அல்லது அன்றைய ரியாலிட்டி ஷோவில் இருந்து வெளியேற்றப் பட்ட இமாலய சோகத்தை யாரோ ஒரு பாடகனோ நடன மாமணியோ தாங்க முடியாமல் தேம்பித் தேம்பி அழுவதை கர்ம சிரத்தையாக ஒளிபரப்பி சோகக் கடை விரித்திருப்பார்கள்.

சரி, இதையெல்லாம் தடுக்க என்னதான் செய்ய முடியும் நாம்? முதலில் அகதிகள் முகாம் என்று அழைக்கப் படும் சிறைகளில் அடை பட்டுக் கிடக்கும் மக்களின் நிலை இன்று என்னவாக இருக்கிறது? அதற்கு காரணமாகச் சொல்லப் படுவது என்ன? அவர்கள் விரும்பிய முறையில் வெளியில் சென்று வேலை பார்க்கவோ, படிக்கவோ முடிவதில்லை. தட்டுத் தடுமாறி படித்து முடிப்பவர்களுக்கும் கூட அரசு வேலை வாய்ப்புக்கள் கனவிலும் சாத்தியமில்லை. ஏகப் பட்ட கண்காணிப்புக்கு உள்ளாகியிருக்கும் இவர்களை வேலைக்கு எடுத்துக் கொள்ளும் துணிச்சல் தனியார் நிறுவனங்களுக்கு மட்டும் வந்துவிடவா போகிறது? வெளியிலிருக்கும் மக்கள் விரும்பினாலும் கூட அவர்களால் முகாமில் இருப்பவர்களுக்கு பொருளாதார உதவிகளோ, வேலை வாய்ப்புக்கான உதவிகளையோ தடையின்றி செய்ய முடிவதில்லை. இத்தனை கட்டுப் பாடுகளுக்கும் இன்று வரை சொல்லப் படும் ஒரே காரணம் இவர்களை சுதந்திரமாக விட்டால் புலிகளுக்கு உதவி விடுவார்கள் என்ற நைந்து புளித்துப் போன ஒற்றை பதில்தான்.

இன்று நம் முன்னால் இருக்கும் மிகப் பெரிய கடமை ஈழப் போராட்டத்தை இனி யார் தொடர்வார்கள் என்று கவலைப் படுவது இல்லை. ஏனெனில் அதில் நாம் உருப்படியாக எதுவும் செய்துவிட முடியப் போவதில்லை என்பது நிச்சயம். தந்திரமாய் இந்திய அரசும், இலங்கை அரசும் செய்யும் பிரச்சாரத்தை முறியடிக்க அவர்களின் ஆதாரங்களில் உள்ள ஓட்டைகளைக் கண்டுபிடித்து பட்டியலிடுவதை விட்டுவிட்டு, நாமும் அவர்களின் வழியிலேயே போய் நம்மிடம் உள்ள பிரச்சனைகளுக்கு ஏதேனும் தீர்வு காண முடியுமா என முயலுவதே ஆக்க பூர்வமான முயற்சியாக இருக்கும். சரி, பிரபாகரன் இறந்து விட்டார். புலிகளின் கடைசி அத்தியாயம் முடிந்து விட்டது. எல்லாவற்றையும் நாமும் ஒப்புக் கொள்வோம். இப்போது அந்த அகதி முகாமில் இருப்பவர்களின் மீதான கெடுபிடியை தளர்த்தலாம் இல்லையா? அவர்களையும் பயங்கரவாதிகளைப் போல அச்சத்தோடு பார்க்க வேண்டிய தேவை என்ன? பங்களாதேஷ் சுதந்திரமடைந்த உடன் அங்கிருந்து வந்த அகதிகளையெல்லாம் திருப்பியா அனுப்பி விட்டோம்? அவர்களுக்கு ரேஷன் கார்டு உட்பட எல்லாவற்றையும் கொடுத்து நம் சமூகத்துக்குள்ளேயே ஐக்கியப் படுத்துக் கொண்டுவிட வில்லையா? அதே நியாயம் இனி ஈழத் தமிழர்களுக்கும் பொருந்தும் தானே? இனிதான் யாரும் புலிகள் பூச்சாண்டி காட்ட முடியாதே? புலிகளைத்தான் ஒழித்து விட்டார்களாமே சிங்கள ராணுவத்தினர்? அப்புறமும் என்ன இவர்களைப் பற்றிய பயம்?

எனவே இனியேனும் முகாம்களில் அடைந்து கிடக்கும் அந்த அப்பாவிகளுக்கு கொஞ்சமேனும் சுதந்திரக் காற்றை அனுப்பி வைக்க முயற்சிப்போம். நன்கொடை என்ற நாகரீகப் பிச்சைக்கு பதில் அவர்களின் கல்விக்கும் வேலை வாய்ப்புக்குமான ஏற்பாடுகளை நம்மாலான அளவில் செய்து கொடுப்போம்.

  • அகதிகளாக வந்து இங்கே வாடும் சொந்த சகோதரர்களுக்கு ஒரு விழுக்காடேனும் அரசு வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை தர அரசு முன் வர வேண்டும்.
  • அகதிகள் முகாம் என்ற ஒற்றை கட்டுமானத்திற்குள்தான் வாழ வேண்டும் என்று நிர்பந்திக்காமல், நாட்டின் எப்பகுதியிலும் வாழ அனுமதிக்கப் பட வேண்டும்.
  • பாஸ்போர்ட், விசா போன்ற தகுந்த ஆதாரஙக்ளில்லாமல் கள்ளத் தோணிகளில் வந்து சேர்ந்த இவர்களுக்கு, முதல் கட்ட விசாரணையின் பின் ரேஷன் கார்டு போன்ற முறையான ஆவணங்கள் வழங்கப் பட வேண்டும்.
  • சொந்தத் தொழில் செய்ய நினைப்போருக்கு வங்கிகள் கடன் தர முன் வர வேண்டும்.
  • அங்கே விவசாயம் மட்டுமே செய்து வந்தவர்களுக்கு இங்கேயும் விவசாயத்துக்கு நிலம் ஒதுக்கப் பட வேண்டும்.

இலங்கையில் தவிக்கும் தமிழர்கள் துயர் துடைக்க 500 கோடி ரூபாயை அள்ளித்தரப் போகிறதாம் இந்திய அரசாங்கம். அதுவும் யார் கையில்? எந்த அரசு தன் சொந்த நாட்டு மக்களின் மேல் கொத்து குண்டுகளை வீசியதோ அதே அரசின் கைகளில். சரி, போகட்டும். அதையெல்லாம் தடுக்கும் சக்தி நம் யாருக்கும் இல்லை.

இங்கே நம் நாட்டுக்குள்ளே தவிக்கும் இந்த அப்பாவி மக்களுக்காக அதில் பத்தில் ஒரு பகுதி தொகையை ஒதுக்கினாலே மேலே சொன்ன நலத் திட்டப் பணிகளை விடவும் கூடுதலாகவே எல்லாம் நடந்துவிடும். சொந்த தேசத்தை விட்டு வெளியேறி வரும் முன் அந்த மக்கள் வாழ்ந்த பொருளாதார நிலையை இங்கு நாம் ஏற்படுத்திக் கொடுக்க முயல வேண்டும். அப்போதுதான் என்றாவது அவர்கள் சொந்த தேசத்துக்குத் திரும்பும் போது, விட்டு வந்த வாழ்கையை தொடர்வதற்கு ஏதுவாக இருக்கும். இல்லையெனில் அங்கு போன பின்னும் பூஜ்யத்திலிருந்து வாழ்கையை கட்டமைக்க வேண்டிய அவலத்திற்கு இம்மக்கள் ஆளாக நேரிடும்.

அதே போல இன்னமும் இலங்கையிலேயே மாட்டிக் கொண்டிருக்கும் மக்களுக்கான மறுவாழ்வுப் பணிகளும் சரியான முறையில் நடக்க வேண்டும். எனவே இனியேனும், செஞ்சிலுவை சங்கமும், மற்ற சர்வதேச தொண்டு நிறுவனங்களும் நேரடியாக அம்மக்களுக்கு உதவ அனுமதிக்கப் பட வேண்டுமென்ற கோரிக்கையை உரக்கச் சொல்ல வேண்டும்.

மீண்டும் மீண்டும் பிரபாகரன் உயிரோடிருப்பதாக நிரூபிப்பதில் நாம் செலவழிக்கும் ஆற்றலை ஆக்க பூர்வமாக இது போன்ற விஷயங்களில் செலவழித்தால் அம்மக்களுக்கு ஏதேனும் நிவாரணம் கிடைக்கக் கூடும். எல்லோரும் போராட்டம் ஓய்ந்து விட்டது என்று சொல்லிவிடுவதால் ஓரு போதும் சுதந்திர உணர்வு இல்லாமல் போய் விடப் போவதில்லை. காலம் வரும் போது சுதந்திரப் போர் மீண்டும் வரட்டும். இப்போது பசியில் சாகிறவனுக்கு உணவும், கொஞ்சம் கவுரவமான வாழ்வும் தர முயற்சிப்போம்.

விடுதலைப்புலிகளின் எழுச்சியும் வீழ்ச்சியும்: 37 ஆண்டு கால போராட்ட வரலாறு

இந்தியாவின் தென்முனையில் கண்ணீர் துளிபோல இருக்கும் குட்டி நாடு இலங்கை. சிங்களர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள், மூர் இனத்தவர்கள் என்று பல்வேறு இனத்தவர்கள் வாழும் நாடு.
1948-ம் ஆண்டு இங்கிலாந்திடம் இருந்து இலங்கை விடுதலை பெற்றது. அங்குள்ள சிங்களர்கள், தமிழர்கள் சுதந்திரக் காற்றை அனுபவிக்கத் தொடங்கினார்கள். ஆனால் பெரும்பான்மை இனமான சிங்களர்களுக்கு மட்டும் தமிழர்கள் மீது எரிச்சல் ஏற்பட தொடங்கியது.

ஆட்சி அதிகாரத்தில் தமிழர்கள் ஆதிக்கம் செலுத்துவதை அவர்கள் விரும்பவில்லை. இலங்கை பாராளுமன்றத்தில் சட்டம் கொண்டு வந்து தமிழர்களுக்கு கிடைக்க வேண்டிய நியமான உரிமைகளை பறித்தனர்.

கல்வி, வேலை வாய்ப்பு உள்பட பல விஷயங்களில் ஈழத்தமிழர்கள் ஓரம் கட்டப்பட்டனர். இது என்ன அநிநாயம் என்று ஈழத் தமிழர்களின் தலைவர்கள் கேள்வி கேட்டனர். அதை சிங்களர்கள் கண்டுகொள்ளவில்லை.

நம்ம ஊரில் மகாத்மா காந்தி சத்தியாகிரக வழியில் போராடி சுதந்திரம் பெற்று தந்தது போல, அங்கு ஈழத்து காந்தி என்று அழைக்கப்படும் செல்வா உள்பட பல தமிழ் தலைவர்கள் தமிழர்களின் உரிமைக்காக அமைதி வழியில் போராடினார்கள்.

கல்வி, வேலை வாய்ப்பில் புறக்கணிக்கப்படும் பட்சத்தில் சொந்த நாட்டில் ஈழத்தமிழர்கள் எப்படி வாழ முடியும் என்று குரல் எழுப்பினார்கள். ஆனால் தமிழ் இனம் ஒரு அடிமை இனம்போல இருக்க வேண்டியதுதான் என்று சொல்லாமல், சொல்லி சிங்கள தலைவர்கள் தொடர்ந்து தமிழர்களை புறக்கணித்தனர்.

இதையடுத்து தமிழர் பகுதிகளில் போராட்டங்கள் வெடித்தன. ஆர்ப்பாட்டம் ஊர்வலங்கள் நடந்தன. தமிழர்கள் அடித்து நொறுக்கப்பட்டனர்.

1954-ம் ஆண்டு பிறந்த பிரபாகரன் சிறு பையனாக இருந்தபோது, ஈழத்தமிழர்கள் மீது போலீசார் நடத்திய வெறியாட்டங்கள் அதிகரித்திருந்தன. அப்போது பிரபாகரன் கேட்ட கேள்வி, ஏன் அடிக்கிறார்கள்? நாம் ஏன் திருப்பி அடிக்கவில்லை?

இந்த சிந்தனை பிரபாகரன் போலவே பெரும்பாலான சிறுவர்கள் மனதில் ஏற்பட்டிருந்தது. அவர்கள் வளர்ந்து வாலிப வயதை தொட்டபோது, குட்ட குட்ட குனிவதா? உரிமைக்காக இனி ஆயுதம் ஏந்துவோம் என்றனர்.

பிரபாகரன் ஒருபடி மேலே சென்று, இலங்கையில் தமிழர்கள் அதிகம் வாழும் வடக்கு, கிழக்கு பகுதியை எங்களுக்கு தனியாக பிரித்து கொடுத்து விடுங்கள். நாங்கள் தமிழ் ஈழம் பெயரில் தனி சுதந்திர நாட்டை உருவாக்கிக் கொள்கிறோம் என்று ஆவேசமானார்.

இலங்கை மொத்த மக்கள் தொகையில் 73.8 சதவீதம் பேர் சிங்களர்கள். 13.9 சதவீதம் பேர் ஈழ தமிழர்கள். 4.6 சதவீதம் பேர் இந்திய வம்சா வழி தமிழர்கள். சுமார் 2 கோடி பேர் கொண்ட மக்கள் தொகையில் சுமார் 50 லட்சம் பேர் ஈழத் தமிழர்கள். இவர்களுக்காக தனி நாட்டை உருவாக்க போவதாக 1972-ம் ஆண்டு பிரபாகரன் அறிவித்தார். விடுதலைப்புலிகள் இயக்கம் பிறந்தது.

இலங்கையை வென்ற தமிழ் அரசன் சோழனின் கொடி புலிக்கொடி. அதையே பிரபாகரன் தன் கொடியிலும் பதித்தார். புலி தலையை சுற்றி 33 துப்பாக்கிக் குண்டு வளையம் அமைத்தார்.

அப்போது ஆட்சியில் இருந்த இந்திரா காந்தியும், எம்.ஜி.ஆரும், ஈழப் போராளிகளுக்கு உதவினார்கள். எதிரி நாடுகள் இலங்கை மண்ணில் தளம் அமைத்து விடக்கூடாது என்ற தொலைநோக்கு பார்வையில் இந்திரா காந்தி ஈழப் போராளிகளுக்கு ஆயுதம் கொடுத்து பயிற்சியும் அளித்தார்.

ஏராளமான இளைஞர்கள் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் சேர்ந்தனர். 1983-ம் ஆண்டு முதல் ஈழம் போர் தொடங்கியது.

விடுதலைப்புலிகள் நடத்திய முதல் கண்ணிவெடி தாக்குதலில் 13 சிங்கள வீரர்கள் கொல்லப்பட்டனர். இதனால் சிங்கள மக்கள் வெறியர்களாக மாறினார்கள்.

கொழும்பில் அரசு பணியில் இருந்த, கடை வைத்திருந்த தமிழர்கள் ஓட, ஓட அடித்து விரட்டப்பட்டனர். 600 தமிழர்கள் கொல்லப்பட்டனர். கொழும்பில் ரத்த ஆறு ஓடியது.

1985-ம் ஆண்டு சிங்கள அரசு முதன் முதலாக ஈழப் போராளிகளிடம் பேச முன் வந்தது. ஆனால் அதை விடுதலைப்புலிகள் ஏற்கவில்லை.

இந்த சமயத்தில் டெலோ, ஈராஸ், இ.பி.ஆர்.எல்.எப்., டி.யூ.எல்.எப் என்று பல போராளிக் குழுக்கள் இருந்தன. இவர்களால் விடுதலைப்போராட்டம் திசை திரும்புவதாக கருதிய புலிகள் ஸ்ரீசபாரத்தினம், அமிர்தலிங்கம், பத்மநாபா ஆகியோரை சுட்டுக் கொன்றனர்.

இந்த நிலையில் இந்தியாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருந்தது. பிரதமர் பதவிக்கு வந்த ராஜீவ் காந்தி இலங்கை கொள்கையில் புதிய அணுகுமுறையை ஏற்படுத்தினார். ஒரு கட்டத்தில் புலிகளை ஒடுக்க இந்திய அமைதிப்படையை அனுப்பி வைத்தார்.

1990 வரை 3 ஆண்டுகள் இலங்கையில் தங்கியிருந்த இந்திய அமைதிப்படை விடுதலைப்புலிகளிடம் இருந்த ஆயுதங்களில் 90 சதவீதத்தை பறித்தது. பிறகு சுமார் 1000 ராணுவ வீரர்களை இழந்து விட்டு இந்தியா திரும்பியது. இது ஈழப்போரின் 2-வது கட்டமாக கருதப்படுகிறது.

இலங்கை பிரச்சினையை தீர்க்க ஜெயவர்த்தனேவுடன் ராஜீவ் காந்தி ஒரு ஒப்பந்தம் செய்தார். இது விடுதலைப்புலிகளிடம் அதிருப்தியை உருவாக்கியது.

1991-ம் ஆண்டு ராஜீவ் காந்தி மனித வெடிகுண்டால் கொல்லப்பட்டார். அதன் பிறகு விடுதலைப்புலிகள் மீதான இந்தியாவின் பார்வை முழுமையாக மாறியது.

விடுதலைப்புலிகள் இயக்கம் மீது சர்வதேச பார்வை மாறவும் இது வழி வகுத்தது. என்றாலும் விடுதலைப்புலிகள் ஈழம் ஒன்றே குறிக்கோள் என்று போராட்டத்தை தீவிரப் படுத்தினார்கள்.

1993-ம் ஆண்டு விடுதலைப்புலிகளின் மனித வெடிகுண்டு மூலம் அதிபர் பிரேமதாசா கொல்லப்பட்டார். இந்த நிலையில் சிங்கள ராணுவமும் தன்னை நவீனப்படுத்தி வலுவாக்கிக் கொண்டது. இதன் காரணமாக 1995-ல் யாழ்ப்பாணம் முழுவதையும் சிங்கள ராணுவம் கைப்பற்றியது.

அதற்கு பதிலடியாக 1996-ல் முல்லைத் தீவில் இருந்த ராணுவ முகாமை விடுதலைப்புலிகள் பிடித்தனர். அங்கு இருந்த 1200 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.

விடுதலைப்புலிகளின் அதிரடி நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனித்து வந்த அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகள் 1997ல் விடுதலைப்புலிகள் இயக்கத்தை தீவிரவாத இயக்கமாக அறிவித்தன.

ஆனால் எதை பற்றியும் கவலைப்படாத புலிகள் தங்கள் லட்சியப் பயணத்தில் உறுதியுடன் இருந்தனர். 1998-ல் கிளிநொச்சி ராணுவ முகாமை கைப்பற்றினார்கள். அங்கு இருந்த சுமார் 1000 சிங்கள ராணுவ வீரர்களை கொன்றனர்.

இதனால் வன்னிப் பகுதியில் புலிகள் வசம் பெரிய அளவில் நிலப்பரப்பு கட்டுப்பாட்டுக்குள் வந்தது. சுமார் 5 ஆண்டுகளில் தன் ஆயுத பலத்தை பெருக்கி புலிகள் இந்த அதிரடிகளை நடத்தியதை பார்த்து உலக நாடுகள் ஆச்சரியப்பட்டன.

புலிகள் வேகத்தை பார்த்த இங்கிலாந்து 2001-ல் புலிகளை தீவிரவாதிகள் என்று அறிவித்தது. இதை காதில் வாங்கிக் கொள்ளாத விடுதலைப்புலிகள் அதே ஆண்டு கொழும்பு சர்வதேச விமான நிலையத்தில் அதிரடி தாக்குதலை நடத்தினார்கள். 6 விமானங்கள் குண்டு வைத்து தகர்க்கப்பட்டன. உலகமே விடுதலைப்புலிகளை திரும்பிப்பார்த்தது.

இதையடுத்து உலகின் பல நாடுகள் சிங்கள அரசுக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே சமரசம் செய்து வைக்க முன் வந்தது. ஆனால் விடுதலைப்புலிகள் இந்தியாவின் சமரசத்தை எதிர்பார்த்தது.

இந்தியா தலைமையில் ஒரு சமரச தீர்வு ஏற்பட வேண்டும் என்று பிரபாகரன் விருப்பம் தெரிவித்தார். ஆனால் சமரசத்தில் ஈடுபட இந்தியா விரும்பவில்லை. வெளியுறவு கொள்கை மாற்றம் காரணமாக இந்தியா அமைதி காத்தது.

இதையடுத்து நார்வே நாடு புலிகளிடம் பேச முன் வந்தது. அதை புலிகளும் ஏற்றுக்கொண்டனர். நார்வே நாட்டின் சமரச முயற்சி காரணமாக சிங்கள ராணுவத்தினரும் விடுதலைப்புலிகளும் போர் நிறுத்தம் செய்தனர்.

2002-ம் ஆண்டு நார்வே நாட்டில் வைத்து சமரச பேச்சு நடந்தது. இலங்கை வடக்கு- கிழக்கில் தமிழர்களுக்கு சுயாட்சி வழங்க தீர்மானிக்கப்பட்டது. இந்த அதிகார பகிர்வு திட்டத்துக்கு இரு தரப்பிலும் சம்மதம் தெரிவிக்கப்பட்டது.

2003-ம் ஆண்டு இந்த சமரச திட்டத்தை ஏற்பதில் விடுதலைப்புலிகளின் மூத்த தலைவர்களிடம் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

சொத்து, பணம் சேர்த்து சொகுசாக வாழ ஆசைப்பட்ட கருணா என்ற முரளீதரன் 2004-ம் ஆண்டு புலிகள் இயக்கத்தில் இருந்து விலகினார். அவருடன் கிழக்கு மாகாணப் பகுதியில் இருந்த சுமார் 3 ஆயிரம் இளைஞர்கள் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்து பிரிந்தனர். புலிகள் இயக்கத்துக்கு ஏற்பட்ட மிகப்பெரிய இழப்பாக இது கருதப்பட்டது.

அடுத்தடுத்து கருணா துரோக செயல்களில் ஈடுபட்டார். விடுதலைப்புலிகளின் பலம் எது பலவீனம் எது என்பதை சிங்கள ராணுவத்திடம் முழுமையாக சொல்லி கொடுத்தார்.

விடுதலைப்புலிகளை எங்கிருந்து, எப்படி தாக்கினால் வேரோடு அழிக்கலாம் என்றும் சொல்லிக் கொடுத்தார்.

இதையடுத்து இந்தியா, சீனா, பாகிஸ்தான் நாடுகளிடம் இலங்கை போர் கருவிகளை வாங்கியது. சர்வதேச கொள்கை மாற்றங்களும் சிங்கள அரசுக்கு சாதகமாக மாறின.

புதிதாக 2007-ல் ஆட்சிக்கு வந்த மகிந்த ராஜபக்சேவுக்கு சீனா அதிகமான ஆயுத உதவி செய்தது. உடனடியாக ராஜபக்சே போரைத் தொடங்கினார். 2007-ம் ஆண்டு நவம்பர் மாதம் தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டார்.

2008ல் போர் நிறுத்தம் முறிக்கப்பட்டது. விமானங்கள் மூலம் குண்டுகள் வீசப்பட்டன. கிழக்கு பகுதி முழுவதையும் விடுதலைப்புலிகள் இழந்தனர்.

4-வது ஈழப்போரை தொடங்குவதாக புலிகள் அறிவித்தனர். கடந்த ஜனவரி மாதம் போரில் கிளிநொச்சி, ராணுவத்திடம் வீழ்ந்தது. அதன் பிறகு முல்லைத் தீவு வீழ்ந்தது.

பிறகு மூன்றே மாதத்தில் வடக்கு பகுதி முழுவதையும் சிங்கள ராணுவம் ஆக்கிரமித்து விட்டது. நேற்று முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முள்ளி வாய்க்காலில் ராணுவம் தன் போரை நிறைவு செய்து விட்டது.

விடுதலைப்புலிகளின் கொடி சின்னத்தில் புலி தலையை சுற்றி 33 குண்டு வைத்ததன் மூலம் 33 ஆண்டுகளில் ஈழம் மலர்ந்து விடும் என்று கூறுவதற்காகத்தான் என்று சொல்வார்கள்.

நேற்று போர் முடிந்த 17-05-2009 ன் கூட்டுத் தொகையும் 33 என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்து என்ன நடக்கும் என்பதுதான் எல்லோரது எதிர்பார்ப்பாக உள்ளது.

பிரபாகரனின் உண்மையான கதி என்ன?

புலிகள் மீண்டும் தலை தூக்க முடியுமா?

ஈழத் தமிழர்களுக்கு இனி அரசியல் தீர்வு மூலம் அமைதியான வாழ்வு பெற்று கொடுப்போம் என்று சொல்லும் சில இந்திய தலைவர்களின் அறிவிப்பு நடைமுறை சாத்தியமா?

வெளிநாடுகளில் வாழும் ஈழத்தமிழர்கள் சுதந்திரமாக தாயகம் வர முடியுமா?

வடக்கில் உள்ள தமிழர்கள் உண்மையான சுதந்திரத்தை அனுபவிக்க முடியுமா?

அவர்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பு உள்ளிட்ட எல்லா அடிப்படை உரிமைகளும் கிடைக்குமா?

புலிகள் ஆயுதத்தை கீழே போட சம்மதித்து விட்டனர்.

ஆனாலும் சிங்கள ராணுவம் தொடர்ந்து தமிழர்களை குறி வைத்து தாக்கி அழித்து வருகிறது. வன்னி முழுவதும் மரண ஓலம் கேட்கிறது. இதற்கெல்லாம் தீர்வு என்ன?

நிறைய கேள்விக்குறிகள் உலக நாடுகள் போல மவுனமாக தலை தூக்கி நிற்கின்றன.

காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

 

©2009 THAIMADY RESEARCH | Thaimady comments by KABILAN